வடக்கின் பெரும் போர்-தென்னிலங்கை ஊடகங்களுக்கு விலை போன பரிதாபம்-ஆர்வலர்கள் கொந்தளிப்பு..!

வடக்கின் பெரும்போர் துடுப்பாட்ட போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தென்னிலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனம் ஒன்றின் சதி நடவடிக்கையால் ஊடகங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

யாழ்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 117வருட பாரம்பரியத்தைக்கொண்ட வடக்கின் பெரும்போர் துடுப்பாட்டப் போட்டியில் இரு கல்லூரி வீரர்கள் ஊடகங்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, போட்டிகளில் பார்வையாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பில் இரு கல்லூரி அதிபர்களால் அறிவிக்கபடுவது வழமையானது.

எனினும் இம்முறை வழமைக்கு மாறாக வடக்கின் பெரும்போர் குறித்து ஊடகங்களுக்கு எதுவித அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை. அத்தோடு இரு கல்லூரி அணித் தலைவர்களும் இணைந்து வெற்றிக் கிண்ணத்தினை ஊடகங்கள் முன் அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊடகங்களுக்கு அறிவிக்கும் பொறுப்பை யாழ்.மத்திய கல்லூரி பொறுப்பெடுத்தபோதும் ஊடகங்களுக்கு எதுவிதமான அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களை ஊடகங்கள் தொடர்புகொண்டபோதும் அவர்கள் பொறுப்பற்ற பதில்களை வழங்கியுள்ளனர்.

குறித்த போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் தென்னிலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனம் தனது விளையாட்டு செய்திகள் அடங்கிய இணையத்தளத்தை பிரபல்யமாக்கும் முனைப்போடு பிரதான ஊடங்களை புறக்கணித்துள்ளது.

குறித்த தென்னிலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம் பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டிகளின் போதும் ஊடகங்களை திட்டமிட்டு புறக்கணித்தது.

போட்டிகளுக்கு அனுசரணை வழங்குபவர்கள் தங்கள் நலன்களுக்காக 117வருடபாரம்பரியத்தை மாற்றுவதற்கு இரு கல்லூரி நிர்வாகங்களும் துணைபோக்க்கூடாது என மூத்த ஊடகவியலாளர்கள் பலரும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வழமையாக வீரர்கள் அறிமுகவிழா ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டு ஊடகங்களிலும் வடக்கின் பெரும்போர் செய்திகள் முக்கியத்துவமளித்து பிரசுரமாகின்றபோதும் இம்முறை வடக்கின் பெரும் போர் சம்பந்தமான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறியமுடியவில்லை என்றும், வடக்கின் பெரும்போர் சோபையிழந்துள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் இரு கல்லூரி பழைய மாணவர் சங்கங்களும் தலையிட்டு வடக்கின் பெரும்போர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் எனவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.