‘மதபோதனை’ – தற்கொலை முயற்சி தொடர்வதால் பரபரப்பு

0 12

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திம்புலாகல, சிறிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையொருவரே தற்போது தெஹிஅத்தகண்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரியவருகின்றது.

நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள், மாலபே, காஹன்தொட்ட பகுதியில் டிசம்பர் 30 ஆம் திகதி அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

35 வயதுடைய தாய், 9 மற்றும் 7 வயதுகளுடைய இரு மகன்மார் மற்றும் 6 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர் குறித்த பெண்ணின் கணவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் இறுதிக்கிரியைகள் டிசம்பர் 29 ஆம் திகதி நடந்துள்ளன.

இந்தநிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.

ருவான் பிரசன்ன குணரத்ன என்ற 46 வயது நபர் (மேற்படி குடும்பத்தின் தலைவர்) மத போதனைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். மரணம் பற்றியே அவர் போதனைகளின்போது அதிகம் பேசியுள்ளார். இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களிலும் உள்ளன.

இவரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்றிருந்த 35 வயது இளைஞர் ஒருவரும், 21 யுவதி ஒருவரும் ஜனவரி 3 ஆம் திகதி இரு வேறு இடங்களில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. மேற்படி நபரின் போதனைகளில் இவர்கள் இருவரும் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. அத்துடன், இறுதிக்கிரியைகளிலும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மேற்படி நபரின் (ருவான் பிரசன்ன குணரத்ன) போதனைகளில் பங்கேற்ற மற்றுமொருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் தனது மனைவி சகிதம் இறுதிக்கிரியைகளுக்கு சென்றுள்ளார். இந்த தகவலை அவரின் தந்தை உறுதிப்படுத்தியுள்ளார் என தொலைக்காட்சியொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ருவான் பிரசன்ன குணரத்ன தற்கொலையை தூண்டும் விதத்தில் தவறான கருத்தை அவர் விதைத்துள்ளார் என புலனாய்வு பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நஞ்சு – இரசாயனம் என்ன வகையை சேர்ந்தது என்பது தொடர்பில் இரசாயன பரிசோதனை இடம்பெற்றுவருகின்றது. அது சயனைட்டாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு அந்த இரசாயனத்தை ருவான் பிரசன்ன குணரத்ன வழங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் போதனைகளில் எவரேனும் பங்கேற்றிருந்தால் அவர்கள் தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, ருவான் பிரசன்ன குணரத்ன விவகாரம் தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். அவரின் பின்புலம் பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றது. அவருக்கான நிதி மூலங்கள் பற்றியும் விசாரணைகள் தொடர்கின்றன.

குறிப்பு – ( தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. மூட நம்பிக்கைக்கு அடிபணிந்து தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனமான முடிவாகும். பொறுப்பும், பொதுநலன் கருதியுமே இந்த செய்தி பதிவிடப்படுகின்றது. )

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.