பாடசாலை நாளில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு – யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் அசமந்தம்!

102

அராலியில் இளைஞர் கழகம் ஒன்று முறைகேடான விதத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்ச்சை எழுந்திருந்தது. சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு கூட்டம் நடாத்தாமல் சிலர் தமது பெயர்களை எழுதி, சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் செல்வாக்குடன் இளைஞர் கழகத்தினை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கிராம சேவகர் பிரிவில் ஏற்கனவே இளைஞர் கழகத்தினை நடாத்திய இளைஞர்கள், நிர்வாக தெரிவு கூட்டத்தினை நடாத்தி நிர்வாகத்தினை தெரிவு செய்யுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி. வினோதினி அவர்கள் இது குறித்து கலந்துரையாடுவதற்கு, இளைஞர் கழகத்தினை ஏற்கனவே நடாத்தியவர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்துக்கு அழைத்திருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு கலந்துரையாடுவதற்கு அழைத்த மாவட்ட பிரதிப் பணிப்பாளர் திருமதி. வினோதினி அவர்கள், சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரையும் இன்னொரு உத்தியோகத்தரையும் இது குறித்து கலந்துரையாடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்நிலையில் குறித்த இளைஞர்கள் இளைஞர் கழகமானது நிர்வாக தெரிவு கூட்டம் நடாத்தி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தவேளை, சங்கானை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிவிட்டு மூன்று தடவைகள் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி. வினோதினி அவர்களிடத்தில் எழுத்து மூலமான முறைப்பாட்டினை வழங்கியிருந்தார். அத்துடன் வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் அபயத்திலும் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இருப்பினும் இது குறித்து தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன என இதுவரை குறித்த இளைஞனுக்கு எந்தவிதமான பதில்களும் வழங்கப்படவில்லை.
மாவட்ட பிரதிப் பணிப்பாளர் திருமதி.வினோதினி அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பல தடவைகள் கேட்டும் அவர் அதற்கு சரியான பதில் வழங்காமல் சாக்குப்போக்கு கூறி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இளைஞர் கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு கூட்டமானது நாளையதினம் (19.03.2024) நடாத்தவுள்ளதாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் கழகம் என்பது 14 தொடக்கம் 29 வயதுடையவர்களை உள்ளடக்கி அமைவதாக காணப்படும். ஆனால் நாளை பாடசாலை நாள் என்பதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள ளவோ அல்லது நிர்வாகத்தில் பங்கெடுக்கவோ முடியாத நிலை காணப்படுகிறது. அத்துடன் ஏனைய இளைஞர் யுவதிகளும் தங்களது தொழில் நிமித்தமாக செல்லும் நிலைமையும் காணப்படுகிறது.

இளைஞர்களிடத்தே ஆளுமைகளையும் தலைமைத்துவ பண்புகளையும் உருவாக்கி அவர்களை நற் பிரஜைகளாக உருவாக்கும் நோக்கிலேயே இளைஞர் கழகமானது உருவாக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு இளைஞர் யுவதிகள் கூட்டத்தில் பங்கெடுக்க முடியாத நாளில் கூட்டத்தினை நடாத்துவதன் மூலம் குறித்த நிர்வாகமானது ஒரு ஆரோக்கியமானதாக அமைவதற்கு வாய்ப்பில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறித்த கூட்டத்தினை ஞாயிற்றுக்கிழமையில் நடாத்த வேண்டும் என்பதே இளைஞர் யுவதிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுவரை நடைபெற்ற பிரதேச இளைஞர் சம்மேளன நிர்வாகத் தெரிவு கூட்டங்களோ, அல்லது மாவட்ட சம்மேளன நிர்வாக கூட்டங்களோ ஞாயிற்றுக்கிழமைகளிலேயே நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG 20240313 WA0155 (1)

IMG 20240318 WA0175

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.