பஞ்சுமிட்டாய்களை உண்ணவேண்டாம்-அவசர அறிவிப்பு

இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் ரோஸ் நிற பஞ்சு மிட்டாய்களை சிறுவர், சிறுமிகளுக்கு வழங்க வேண்டாம் என அம்மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

புதுச்சேரி சுற்றுலாத்தலமாக விளங்குவதால் இங்கு சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் இந்தியா மற்றும் வௌிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதோடு
அவர்களை கவரும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் அவ்வாறு கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா பகுதிகளில் ரோஸ் நிறத்திலான பஞ்சு மிட்டாய்கள் விற்கப்படுகின்றதோடு
வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வகை பஞ்சு மிட்டாயைக் கொண்டுவந்து மக்கள் கூடும் இடங்களில் விற்று வருகின்றனர்.

குறிப்பாக இவற்றை சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வாங்கி உண்ணுகின்றனர். புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இந்த பஞ்சு மிட்டாயைப் பரிசோதனை செய்ததில் இவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அங்கு விற்பனையான பஞ்சுமிட்டாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இதனை விற்பனை செய்யும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.

இருப்பினும் இது குறித்து எச்சரிக்கையை மக்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

Comments are closed.