திருமலை வைத்தியசாலையில் DJ குத்தாட்டம். இழவு வீட்டில் கொண்டாட்டத்திற்கு ஒப்பானது

0

திருகோணமலை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (21) இரவு 9.00 மணிமுதல் நேற்று (22) அதிகாலை 3.00 மணிவரை மதுபான விருந்துடன்கூடிய குத்தாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பழைய பணிப்பாளரின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.

குறித்த களியாட்ட நிகழ்வு மிகவும் வெறுப்பூட்டும் வகையில் அமைந்திருந்ததோடு மதுபோதையில் நிதானம் இல்லாமல் இடம்பெற்ற எல்லைமீறிய குத்தாட்டங்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்திருந்தன. இதனால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

இதேநேரம் சில களங்களின் முன்பாகவும், சவச்சாலையின் முன்பாகவும் கதறி அழுதுகொண்டிருந்த கூட்டத்தையும் காண முடிந்தது. இவர்கள் இவ்வாறு கவலையுடன் இருக்கும்போது மறுபுறம் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொருவரும் மனிதன்தான் அவர்களுடைய உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் ஆனால் எந்த நிகழ்வை எங்கு நடத்த வேண்டும் என்ற வரையறை இருக்கின்றது.

இதுபோன்ற குத்தாட்டங்களுக்கு வைத்தியசாலை எப்போதும் பொருத்தமான இடமாகாது. குறித்த நிகழ்வை அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திலோ அல்லது வேறு இடத்திலோ நடத்தியிருக்கலாம்.

சில குடும்பங்கள் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து சவச்சாலையை பார்த்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, இன்னுமொரு தரப்பினர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் நிலையை எண்ணி அழுதுகொண்டிருக்க சுகாதார ஊழியர்கள் உட்பட ஏனையோர் குடியும் குத்தாட்டமுமாக இருப்பதற்கு இது வைத்தியசாலையா அல்லது வேறு இடமா?

எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் தவிர்த்து வைத்தியசாலைக்குரிய பண்புகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.