சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!!!

0

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், தியாகச் சாவைத் தழுவிக்கொண்ட முதல் மனிதன் என்னும் மரியாதைக்குரிய திருமலை நடராஜன் அவர்கள், 1957.02.04 ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, திருமலையில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67 வருடங்கள் கடந்தும், இந்த நாட்டில் தமிழர்களின் இறைமை இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை.

தமது பூர்வீக மண்ணில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை நிலைநிறுத்த, அரசுக்கும் அரச கட்டமைப்புகளுக்கும் எதிராக எல்லாவழிகளிலும் போராடவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள எமது மக்களது அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், எமது மக்களின் குரலாகவுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவரை, ஈழத்தமிழர்களை இறைமையுள்ள தேசிய இனமாக இலங்கைத் தேசம் அங்கீகரிக்காதவரை, இந்த நாட்டின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாளே என்பதை மீள வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில், அரசியற் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள் எவையுமற்று எமது இனத்தின் உரிமைக்கான ஏகோபித்த குரலாக எல்லோரும் இணைந்து, இதனை ஒரு மக்கள் திரட்சி மிக்க போராட்ட வடிமாக எழுச்சிபெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுநிற்கிறேன். – என்றுள்ளது.

Screenshot 2024 02 02 15 05 58 851 com.google.android.apps.docs edit

Leave A Reply

Your email address will not be published.