இன்னும் ஏழு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்

இன்னும் ஏழு மாதங்களில் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த நாட்டை ஒன்றிணைத்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கான வேலைத்திட்டத்திற்காக ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் கட்சி சார்பற்ற ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தேன் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உங்கள் நம்பிக்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அத்திபாரத்தை அமைப்பதே எமக்கு அவசியமாகும். தங்களது பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதே யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் ஒரே நோக்கமாகும்.

இந்த பிரதேசத்தின் விவசாயத் துறையை எவ்வாறு முன்னேற்றுவது? இங்கு உள்ளவர்களின் பெரும்பாலோனரின் உறவினர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். சுமார் 40 முதல் 45 சதவீதமானனோரின் குடும்பங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றது.

இதன் காரணமாக அந்த பணமானது புகைத்தல் அல்லது மதுபானம் போன்ற அவசியமற்ற செயல்பாடுகளுக்காக செலவிடப்படுகின்றது. எனவே அந்த பணத்தை எவ்வாறு சரியான முறையில் செலவு செய்வது என்பது பெற்றோருக்கு உள்ள பிரச்சனையாகும். அத்துடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் ஒரு பிரச்சினையாகும்.

இந்த பிரதேசத்தில் சேதமடைந்துள்ள சின்னங்களை சீரமைப்பது மற்றும் கோவில்களை புனர்நிர்மாணம் செய்தல் முதலான பிரச்சனைகளுக்கு எவ்வாறு பதில் தேடுவது என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகும்.

நீங்கள் இவற்றை எமக்கு மறைக்க வேண்டிய தேவையில்லை. எவ்வாறு உண்மையான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாம் உங்களுடன் வருகின்றோம்.

நாட்டில் தற்போது அர்ப்பணிப்புடன் செயல்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே இதற்கு ஒரே தீர்வாகும்.

எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை இங்கு வந்து, உங்களிடம் நம்பிக்கையைக் கட்டிஎழுப்பி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்ரம்சிங்கவை நிறுத்தி ஜனாதிபதியாக தேர்வுசெய்வதற்காக நாம் இப்போதிருந்தே செயற்பட வேண்டுமென்பதை நான் கூறுகின்றேன்.- என்றார்

Comments are closed.