நாளைய தினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11,12,13, மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட தினமாக நாளைய தினத்தை அறிவித்து அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளைக் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையில் இந்தப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்படும்.
குறித்த தினங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்குப் பொறுப்பான தபால் அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.