பெரு தேசத்தின் லீமா, எஸ்டாடியோ அத்லெட்டிக்கோ டி லா விடேனா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட உலக மெய்வல்லுநர் (உலக கனிஷ்ட) சம்பியன்ஷிப் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியின் அரை இறுதிச் சுற்றில் பங்குபற்ற இலங்கையின் இளம் வீரர் அயோமல் அக்கலன்க தகுதிபெற்றுள்ளார்.
இலங்கை சார்பாக இரண்டாம் நாள் போட்டிகளில் பங்குபற்றிய ஜத்ய கிருலு, ஜித்மா விஜேதுங்க, மதுஷானி ஹேரத் ஆகியோர் பிரகாசிக்கத் தவறினர்.
புதன்கிழமை இரவு நடைபெற்ற 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிக்கான 2ஆவது தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய அயோமல் அக்கலன்க அப் போட்டியை 52.04 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆம் இடத்தைப் பெற்றார்.
தகுதிகாண் சுற்றில் 7 போட்டிகள் நடத்தப்பட்டதுடன் அவற்றில் முதல் 3 இடங்களைப் பெற்ற 21 வீரர்கள் நேரடியாக அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.
அவர்களைவிட அதிசிறந்த நேரப் பெறுதிகளுடன் அடுத்த 3 இடங்களைப் பெற்றவர்களில் அக்கலன்க முன்னிலையில் இருந்ததால் அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
அரை இறுதிகளுக்கு முன்னேறிய 24 வீரர்களில் அக்கலன்க ஒட்டுமொத்த நிலையில் 12ஆம் இடத்தில் உள்ளார்.
அவர் பங்குபற்றவுள்ள அரை இறுதிச் சுற்று ஆகஸ்ட் 30ஆம் திகதி (இலங்கை நேரப்படி ஆகஸ்ட் 31ஆம் திகதி அதிகாலை 2.35 மணி) நடைபெறவுள்ளது.
அரை இறுதியுடன் ஜத்ய வெளியேறினார்
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் ஜத்ய கிருலு அரை இறுதிப் போட்டியுடன் வெளியேறினார்.
தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியை 47.64 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆம் இடத்தைப் பெற்றதன் மூலம் அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
அரை இறுதிக்கு தகுதிபெற்ற 24 பேருக்கான ஒட்டுமொத்த நிலையில் 23ஆம் இடத்தில் இருந்த ஜத்ய கிருலு அரை இறுதிக்கான 3ஆவது போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்று வெளியேறினார்.
அப்போட்டியை 47.85 செக்கன்களில் நிறைவு செய்த அவர் ஒட்டுமொத்த நிலையில் 16ஆவது இடத்தைப் பெற்றார்.
ஜித்மா கடைசி இடம்
பெண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் சுற்றின் முதலாவது போட்டியில் பங்குபற்றிய ஜித்மா விஜேதுங்க கடைசி இடத்தைப் பெற்று (56.16 செக்.) வெளியேறினார்.
52 வீராங்கனைகள் 8 தகுதிகாண் சுற்றுகளில் பங்குபற்றிய அப் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் ஜித்மா 47ஆவது இடத்தைப் பெற்றார்.
மதுஷானிக்கு பலத்த ஏமாற்றம்
பெண்களுக்கான முப்பாய்ச்சலில் சாதிக்கக்கூடியவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுஷானி ஹேரத், முழு இலங்கையையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கினார்.
இப்போட்டிக்கான ஏ குழுவுக்கான தகதிகாண் சுற்றில் பங்குபற்றிய 16 வீராங்கனைகளில் மதுஷானி ஹேரத் 12.23 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 14ஆம் இடத்தைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
ஏ மற்றும் பி குழுக்களில் 31 வீராங்கனைகள் பங்குபற்றி தகுதிகாண் சுற்றுக்கான ஒட்டுமொத்த நிலையில் 26ஆவது இடத்தை மதுஷானி பெற்றார்.