எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் முன்னாள் போராளிகள் அமைப்பான புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் இன்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்து தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தனர்.
முற்றுமுழுதாக முன்னாள் போராளிகளை மையப்படுத்தியதான நிபந்தனைகளை முன்வைத்தே குறித்த ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியிருப்பதாக க.இன்பராசா இது தொடர்பில் தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் போராளிகள் என்ற அடிப்படையில் மிகவும் ஆழமாகச் சிந்தித்து இந்த முடிவினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். தற்போதைய காலத்தில் நலிவுற்று வாழ்வாதார ரீதியில் அல்லலுறும் முன்னாள் போராகளின் விடயங்களை முதன்மைப் படுத்தியே நிபந்தனையுடனான இந்த ஆதரவினை நாங்கள் வழங்கியுள்ளோம்.
2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதில் இருந்து தேசியம் சார்ந்த அரசியல் பலவாறு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முன்னாள் போராளிகளின் நிலைமகள் குறித்து அந்தக் கட்சிகள் இந்த நொடிவரை சிந்தித்தது கிடையாது. போராளிகளை வைத்து, அவர்களின் தியாகங்களை வைத்து இங்கு அரசியல் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர முன்னாள் போராளிகளின் தற்கால நிலை குறித்து எவரும் சிந்திப்பதாக இல்லை.
அந்த அடிப்படையிலேயே எமது இந்தத் தீர்மானம் அமைந்திருக்கின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் ஊடாக முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படும் நிலை மாற்றப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள முன்னாள் போராளிகளுக்கான தொழில் நியமனங்களுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். போராளிகளின் வாழ்வாதரம் மேம்படும் விதத்தில் மாவட்ட ரீதியில் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்தே இந்த ஆதரவினை நாம் வழங்கியுள்ளோம்.
இத்தனை வருட காலங்களில் நாட்டின் யதார்த்தத்தை மிகவும் உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.