27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்

ரணிலுக்கான ஆதரவை வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றையதினம் (21) கொழும்பில சந்தித்த போதே தமது ஆதரவை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு. எல். எம். என். முபின் நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது,

“ இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வின்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மற்றும் தென் இலங்கை முஸ்லிம்களுக்கு உரிய அடிப்படையிலான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் அத்தோடு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக மோசமாக காணி பற்றாக்குறையை எதிர்நோக்கும் முஸ்லிம்களுக்கு உரிய அவர்களின் இனவிகிதசார அளவுக்கு ஏற்ப காணிப் பங்கீடு வழங்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தகுதியான முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் இருந்த போதும் அம்பாறை திருவோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சூழ்நிலையில் இதுவரையில் முஸ்லிம் அரசாங்க அதிபர்கள் ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

அத்தோடு முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து மாகாண ஆளுநர் நியமிக்கப்படவில்லை.

எனவே எதிர்காலத்தில் பொருத்தமான முஸ்லிம் சமூகத்தில் இருந்து தகுதியானவர்களை இத்தகைய பதவி நிலைகளுக்கு நியமிக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இதுவரையில் முறைப்படியான மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தில் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் கடந்த யுத்த காலத்தில் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டன.

அந்த கிராமங்களுக்கான மீள்குடியேற்றமும் உரிய முறைப்படி நடைபெறவில்லை. எனவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இதற்கென ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை அமைத்து மேற்படி மீள்குடியேற்றத்தை செய்து தர வேண்டும்.

1999 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பிரதேச செயலகமான கோரளை மற்று பிரதேச செயலகம் இதுவரையில் உரிய பிரதேசத்திற்குரிய கானிய அமைப்போடு இயங்கவில்லை. 

இந்நிலையில், அதற்கான அமைச்சரவை தீர்மானம் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

காத்தான்குடியின் எல்லை பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான மூன்று அரசாங்க வர்த்தமானி இருந்தும் காத்தான்குடியின் எல்லைகள் தீர்த்து வைக்கப்படவில்லை வர்த்தமானி உள்ளபடி அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிரான் கோரளை தெற்கு பிரதேச செயலகத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு என காணியைக் கொண்டிருந்த கோரளை மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து 155 சதுர கிலோ மீட்டர் காணி எடுக்கப்பட்டு அது கிரான் பிரதேச செயலகத்தோடு இணைக்கப்பட்டதால் ஓட்டமாவடி மக்கள் பாரிய காணி பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.

எனவே அந்த 155 சதுர கிலோமீட்டர் காணியை மீண்டும் ஓட்டமாவடி மேற்கு கோரளை மேற்கு பிரதேச செயலகத்தோடு இணைக்க வேண்டும்.

அத்துடன், ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 4ஆம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி,எல்லை நகர் கிராமங்கள் 1990 ஆம் ஆண்டு யுத்த நிலைமையின் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தோடு தற்காலிகமாக இணைக்கப்பட்டதோடு அது இதுவரை மீண்டும் ஏராவூர் நகர பிரதேச செயலகத்தோடு இணைக்கப்படவில்லை. அதனால் அம்மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

அதேபோன்று ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தோடு இயங்குகின்ற ஐயங்கேணி ,மீராகேணி, மிச்சி நகர் போன்ற கிராமங்கள் ஏராவூர் நகர பிரதேச செயலக நிர்வாகத்தினால் முழுமையாக நிர்வாகம் செய்யப்படாமல் ஏராவூர் பற்று பிரதேச செயலகம் அதில் தலையீடுகளை மேற்கொள்கிறது. அதனை முழுமையாக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தோடு இணைக்க வேண்டும்.

காத்தான்குடிகான கழிவு நீர் முகாமை திட்டம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக அதிகமான சனத்தொகையை கொண்ட நகரங்களில் ஒன்றான காத்தான்குடிக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கிற உங்களால் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை கழிவு நீர் முகமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடியில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளத்தின் காரணமாக 40 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 

ஆகவே, காத்தான்குடி கான வெள்ள தடுப்பு திட்டம் ஒன்றை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு புதிய காத்தன்குடியில் மிக அதிகமாக மக்கள் பல்வேறு காணிப் பிரச்சினைகளை நிர்வாக ரீதியாக எதிர்நோக்குகிறனர்.

காத்தான்குடி பிரதேசம் நகர் சபையாக தரம் உயர்த்தப்பட்ட போது அந்த காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை. அதனால் தற்போது மக்கள் காணி உரிமையை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

மேற்படி, பிரச்சினை தீர்த்து வைப்பதற்காக புதிய காத்தான்குடிக்கான பிரதேச சபை ஒன்றை உருவாக்கித் பிரகடனப்படுத்துவதோடு அப்பிரதேச சபையோடு பாலமுனை பூனைச்சிமுனை, மஞ்சந் தொடுவாய், கர்பலா மற்றும் ஆரயம்பதி கிழக்கு போன்ற பிரதேசங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்” என ஜனாதிபதியிடம் கோரிக்கைக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏசி அப்துல் காதர் அப்துல் லெத்நீப், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எச் எம் எம் பாகிர், காத்தான்குடி நகர சபையின் மற்றுமொரு உறுப்பினர் டி எம் எம் தௌபிக் ஜேபி, ஆரையம்பதி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ் அன்சார், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மேற்படி முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசேட வேலை திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் எதிர்காலத்தில் ஒரு புதிய கட்சியை தொடங்கி அதிலே முஸ்லிம் பிரிவை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த முஸ்லிம் பிரிவொன்றை அமைப்பதனால் முஸ்லிம் சமூக பிரச்சினைகளை கையாள்வதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தினால் துப்பாக்கிப் பிரயோகம்!

User1

அரியநேந்திரன் அவர்கள் அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி.

User1

சீன தூதுவரை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்

User1

Leave a Comment