ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ரணில்
விக்கிரமசிங்க, மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் சமத்துவக்
கட்சிக்குமிடையில் தனித்தனியாகச் சந்திப்புகள் நடந்துள்ளன.
கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற இச் இ சந்திப்புகளில் சமத்துவக்
கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு
சந்திரகுமார், கட்சியின் தவிசாளர் சு. மனோகரன் ஆகியோர்
பங்கேற்றிருந்தனர்.
இச் சந்திப்பு தொடர்பில் சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
“தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் இனரீதியாகப் பல வழிகளிலும்
ஒடுக்கப்படுகின்றனர். இதற்குத் தீர்வைக்காண முடியாதிருப்பது நாட்டின்
தோல்வியே எனவும். அதிகாரத்தில் இருப்போரும் அதிகாரத்துக்கு வெளியே
இருந்து அரசியல் செய்வோரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இன ஒடுக்குமுறை
தொடர்வதால், பிரச்சினைகளும் பாதுகாப்பற்ற நிலையும் தொடருகின்றன.
யுத்தம் முடிந்த பிறகும் தமிழ் பேசும் மக்கள் நடத்துகின்ற போராட்டங்களே
இதற்குச் சாட்சி. இனியும் கால நீடிப்புச் செய்யாமல் இனப்பிரச்சினைக்குத்
தீர்வைக் காண வேண்டும். அதற்கான கால வரையறையும் அட்டவணையும் அவசியமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற வகையில் பன்மைத்துவத்துக்கும்
சுயாதீனத்துக்கும் உரியவாறு அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவது அவசியம்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணாமல் நாட்டைப் பொருளாதார ரீதியாக
மேம்படுத்துவது கடினம். நாடு பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கும் பிற
சக்திகளின் பிடியிலிருந்து விடுபடுவதற்கும் தீர்வு அவசியமாகும் என
வலியறுத்தப்பட்டதோடு.
ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் சமத்துவக் கட்சியின் நிலைப்பாடானது, மக்களின்
கருத்தறிந்தும் வேட்பாளர்களின் நிலைப்பாட்டை அவதானித்தும் பொருத்தமான
முறையில் விரைவில் எட்டப்படும்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்
எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இருவரிடத்திலும் சமத்துவக் கட்சி
தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
பிரதான வேட்பாளர்களாக உள்ள ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச,
அநுரகுமார திசநாயக்க ஆகியோர் ஒவ்வொரு அரசியற் கட்சிகளின் ஆதரவையும்
தனித்தனியாக பெறுவதற்கே முயற்சிக்கின்றனர்.
இந்த உபாயத்தில் அவர்கள்
வெற்றியடையவே விரும்புகின்றனர். இதைக் கூட்டாக எதிர்கொள்ளக் கூடிய
அரசியல் ரீதியான ஒருங்கிணைவு தமிழ்த் தரப்பிலும் இல்லை.
தமிழ் பேசும்
ஏனைய சமூகங்களான மலையக, முஸ்லிம்களிடத்திலும் காணப்படவில்லை.
தமிழ்பேசும்
தேசிய இனச் சமூகங்கள் என்ற வகையில் கூட்டாக இந்தத் தேர்தலை நாம்
எதிர்கொள்ள வேண்டும். அதுவே பிரதான வேட்பாளர்களை எமது கோரிக்கைகளை நோக்கி வளைப்பதற்கான நெருக்கடியைக் கொடுப்பதோடு, அதுவே எமது மக்களையும்
பலப்படுத்தும் எனத் தெரிவித்துள்ள சமத்துவக் கட்சியினர்.
தற்போதுவரையில் ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய முடிவை எடுப்பது? யாருக்கு
வாக்களிப்பது? அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? அதற்கான சாத்தியங்களும்
உத்தரவாதங்களும் என்ன? என்ற கேள்விகளோடுதான் தமிழ்பேசும் மக்கள் உள்ளனர்.
தொடரும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டக் கூடிய திடசித்தத்தையும்
அரசியல் மாற்றத்தை உண்டாக்கக் கூடிய மனவிரிவையும் எந்தப் பிரதான
வேட்பாளரிடத்திலும் இன்னும் காணமுடியவில்லை.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் எதிர்பார்க்கப்படுகின்ற –
தேவைப்படுகின்ற அபிவிருத்தியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் எந்த
வேட்பாளரும் – வெற்றியாளரும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான சாத்திங்கள்
குறைவே.
இதை மறைத்துக் கற்பனையான வார்த்தைகள் இறைக்கப்படுவதில் நம்பிக்கை
கொள்ள முடியாது.
ஒவ்வொரு சமூகத்தையும் பிரதிபலிக்கும் அரசியற் கட்சிகள் தமது நோக்கில்
தீர்மானங்களை எடுத்து, அதை ஆதரிக்குமாறு மக்களைக் கோரும் நிலையே
காணப்படுகிறது.
அவை பொருத்தமான முடிவுகள்தானா என்று மக்கள் சிந்திப்பதையும் அவதானிக்கிறோம். ஜனாதிபதித் தேர்தலில் இவர்கள்
ஆதரிக்கின்ற தரப்பு வெற்றி பெறலாம். அல்லது தோற்றுப்போகலாம்.
ஆனால், அதற்குப் பிறகும் தாம் எடுக்கின்ற தீர்மானங்களின் விளைவுகளுக்கு ஒவ்வொரு
கட்சிகளும் பொறுப்புச் சொல்ல வேண்டும். அந்தத் தார்மீகக் கடமையிலிருந்து
யாரும் விலகிச் செல்லக் கூடாது.