பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட குழுவின் வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அக்குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (06) பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை பாராளுமன்றிற்கு அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2024 ஓகஸ்ட் 02 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது அறிவித்தார்.
சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தல்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 யூலை 26 ஆம் திகதி “சமாதி தியானம் மற்றும் யோகா நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்திலும் 2024 ஓகஸ்ட் 02 ஆம் திகதி “குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” மற்றும் “மாத்தறை பருவகால ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலங்களிலும் தன்னால் சான்றுரை எழுதப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு
இதேவேளை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் 2024 யூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக ஏ.எச்.எம். பௌஸி, (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, வடிவேல் சுரேஷ், எஸ்.சீ. முதுகுமாரண, (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, யூ.கே. சுமித் உடுகும்புர, சஞ்ஜீவ எதிரிமான்ன, (டாக்டர்) திலக் ராஜபக்ஷ மற்றும் (திருமதி) மஞ்சுலா திசாநாயக ஆகிய உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், 2024 யூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண, (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, கருணாதாஸ கொடிதுவக்கு, (டாக்டர்) உபுல் கலப்பத்தி, (திருமதி) கோகிலா குணவர்தன, குலசிங்கம் திலீபன், சுதத் மஞ்சுல, (டாக்டர்) திலக் ராஜபக்ஷ, எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான, மர்ஜான் பளீல், ஜகத் சமரவிக்ரம மற்றும் வீரசேன கமகே ஆகிய உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.