யாழ் மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நித்தியவெட்டை ‐ கேவில் வீதியானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த வீதியால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு மத்தியில் போக்குவரத்து மேற்கொண்டு வருவதோடு குறித்த வீதியை காரணம் காட்டி அவசர தேவையின் போது நோயாளர் காவு வண்டி கூட வந்து செல்ல முடியாத நிலையுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடுவதில்லை. கேவில் தொடக்கம் பருத்தித்துறை வரை சேவையில் ஈடுபட வேண்டிய தனியார் பேருந்துகள் சிலவும் சேவையில் ஈடுபடுவதில்லை.
இந்த வீதியைப் புனரமைப்பு செய்து தரும்படி அரசியல்வாதிகளையும் அரச அதிகாரிகளையும் மக்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர். ஆனால் பலன் ஏதுமில்லை. இந்த வீதியைப் புனரமைப்பு செய்வதற்காக இப் பிரதேச கிராம மட்ட அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
பருத்தித்துறை பிரதேச சபையினுடைய முன்னாள் தவிசாளர் திரு. அரியகுமார் அவர்களிடம் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக 2023 ம் ஆண்டு உள்ளூராட்சி சபை கலைக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன் வீதியிலுள்ள பள்ளங்கள் களி மண் மூலம் நிரப்பப்பட்டது.
ஆனால் அது மழை காலங்களில் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் வீதி பழைய நிலைக்கு வந்தது. அதை விட யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் திரு. டக்ளஸ் தேவானந்தா, பிரதேச செயலர், பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எழுத்தின் மூலமாகவும் நேரடியாகவும் கிராம மட்ட அமைப்புகள் தெரியப்படுத்தியபோதும் இதுவரை பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த வீதியூடாக பயணிக்கும் மக்கள் பாடசாலை, வைத்தியசாலை, அவசர தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது திண்டாடிவருவதோடு இந்தப் பகுதியில் வாழும் மக்களின் தொடர் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு கேட்பாரற்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
பொருளாதார ரீதியாக தமது கிராமம் அழிவின் விழிம்பில் இருப்பதாக கவலை தெரிவித்துவரும் மக்கள் அன்றாடம் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது திண்டாடி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.