டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியான ஒரு பிள்ளையின் தாயான சங்கரி மகாலிங்க சிவக்குருக்கள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் வெகு தீவிர நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர். உயிரிழப்புக்களும் அதிகமாகிக் கொண்டிருக்கிறன.
எனவே மக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புற இடங்களில் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, பணிப்பாளர் வழங்கிய ஊடக அறிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சந்தர்பங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் தென்படவில்லை. எனவே இதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும்.
யாழ் வைத்தியசாலையைச் சுற்றியுள்ள வளாகங்கள் கட்டிடத்தொகுதிகள் பலவற்றில் டெங்கு குடம்பிகள், நீர்தேங்கியுள்ள இடங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட சிரமதான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மேலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இருப்பதனால் இவ்வாறான குடம்பிகள் மற்றும் அதிகளவான நுளம்புகள் காணப்படுகின்ற சந்தர்பங்களில் பல தேவைகளுக்காக யாழ் நகரை நோக்கி வருகின்ற மற்றைய பிரதேச பொதுமக்களும் டெங்கு நோயால் பீடிக்கப்படுகின்ற வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் இது தொடர்பாக அவதானம் எடுத்து சகலரும் நடவடிக்கை எடுக்கவேண்டு மென்பதனையும் மாகாண சுகாதார பணிப்பாளர் என்ற வகையில் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத அல்லது குடம்பிகள் மற்றும் தொற்று நோய் பரவுகின்ற அபாயங்கள் இருக்கின்ற பிரதேசங்கள் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டு டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின் இது தொடர்பான Hot Line இலக்கமான 0761799901 என்ற இலக்கத்திற்கு உங்களுடைய முறைப்பாடுகளை வழங்கலாம்.
இது தொடர்பான உடனடி நடவடிக்கைக்காக துறைசார் உத்தியோகத்தர்களுக்கு இந்த Hot Line இலக்கத்திலிருந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவே உங்களுடைய முறைப்பாடுகளை இவ்விலக்கத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.