தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமை காரணமாக நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தரத் தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 140 ரூபா குறைந்தபட்ச விலை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்த போதிலும், இன்று ஒரு கிலோ நெல்லை 100 ரூபாவுக்குக் கூட கொள்வனவு செய்ய அரசு முன்வரவில்லை. இதனால் ரஜரட்ட உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் விவசாயிகள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்வனவு செய்யப்படும் என அரசு கூறினாலும், கடந்த சில போகங்களாக அரசின் தலையீடு மிகக் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக, தனியார் வர்த்தகர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய அரசே வழிவகுத்துள்ளது. எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டும் என்றும், தேவையான உரம் மற்றும் இரசாயனப் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகின்றோம்.
நாட்டின் விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்வனவு செய்யாத அரசு, வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதியை 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அரிசி இறக்குமதியை செய்ய மாட்டோம் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூறினாலும், நடைமுறையில் பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது.
நாட்டில் அரிசி பற்றாக்குறை இருந்தால் இறக்குமதி செய்வதில் தவறில்லை. ஆனால் அரசின் நெருங்கிய ஆதரவாளர்களை பணக்காரர்களாக்குவதற்காகவே இந்த இறக்குமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வெளிநாட்டு அரிசி உபரியாக உள்ளதால் அதனை அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ வீதம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அரசின் இந்தத் திறமையற்ற தன்மையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன், குரங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு முறையான விஞ்ஞானபூர்வ தீர்வைக் காணவும் அரசு தவறிவிட்டது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘பராட்டே சட்டம்’ தற்போது வங்கிகளால் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தீவிர கோரிக்கைக்கு அமைவாகவே இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.
நாட்டின் வருமானத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் மீண்டெழுவதற்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் அவகாசம் வழங்க வேண்டும். அதை விடுத்து வங்கிகள் இந்தச் சட்டத்தை மீண்டும் கடுமையாகப் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான வணிகங்கள் அழிந்து நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பாதிப்பு ஏற்படும். எனவே, அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தொழிலதிபர்களைப் பாதுகாக்க வேண்டும்.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், இதுவரை 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டெங்குவை ஒழிப்பதில் அரசு, மாகாண சபைகள் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை. அரச மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதோடு சுகாதாரக் கட்டமைப்பு இதனைத் தாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த அரசுகளின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணம் என தற்போதைய அமைச்சர்கள் தட்டிக்கழிக்கக் கூடாது. கடந்த அரசுகள் தவறிழைத்திருந்தால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு அதனைச் சரியாகச் செய்து காட்ட வேண்டும். வெற்றுப் பெருமைகளைப் பேசுவதை நிறுத்திவிட்டு உள்ளூராட்சி அமைப்புகளைக் கொண்டு டெங்குவை ஒழிப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தாலும், அவர்களிடமிருந்து கிடைக்கும் வெளிநாட்டு வருமானம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் 1503 மில்லியன் டொலராக இருந்த சுற்றுலா வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,360 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அதிக பணம் செலவழிக்கக்கூடிய வசதி படைத்த சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான முறையான ஊக்குவிப்புத் திட்டங்கள் அரசிடம் இல்லை என்பதையே இது காட்டுகின்றது.
அரசு எரிபொருள் விலையை 20 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், கடந்த காலங்களில் பெருமளவில் விலையை உயர்த்தியிருந்தது. தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 முதல் 80 டொலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்தப் பலனை மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும்.
விலைச்சூத்திரம் தேவையில்லை என்றும், துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் விலைக்கே எரிபொருள் வழங்கப்படும் என்றும் அரசு முன்பு கூறியிருந்தது. தற்போதைய உலக சந்தை நிலவரப்படி, எரிபொருளை பழைய குறைந்த விலைக்கே மக்களுக்கு வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.










