எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை, மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சு உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையில் 500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும் மிகுந்த நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான பின்னணியில், பௌத்த – கத்தோலிக்க ஒற்றுமையைத் தகர்த்துச் சிங்கள சமூகத்தைப் பலவீனப்படுத்தும் நுட்பமான சதியொன்று அரங்கேறி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபைக்குள் ஆதிக்கம் செலுத்தும் சில மதகுருமார்களைக் கொண்ட என்.ஜி.ஓ. கும்பலே இதற்குத் தலைமையேற்கின்றது.
ஈஸ்டர் தாக்குதலின் பொறுப்பிலிருந்து முஸ்லிம் தீவிரவாதிகளை முழுமையாக விடுவித்து, அதனைப் பௌத்தர்கள் மீது திட்டமிட்டுச் சுமத்துவதே இவர்களின் பிரதான நோக்கமாகும். இதற்காகவே அசாத் மௌலானா போன்றோரின் பொய் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, பேராயர் கர்தினாலும் செயற்பட்டு வருகின்றாரா என்ற பலத்த கேள்வி எழுகின்றது.
மறுபுறம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சாட்சியான இப்ராஹிம் நானாவின் வீட்டுப் பணிப்பெண்ணை மர்மமான முறையில் வெளிநாடு செல்ல அனுமதித்துள்ளது. இதன் மூலம், இப்ராஹிம் நானா சட்டப் பிடியிலிருந்து விடுதலையாவதற்கும், அவரது முடக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவருக்கே கிடைப்பதற்கும் இந்த அரசு மறைமுகமாக வழிவகை செய்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது மாணவர்களின் அடிப்படை உரிமைகளைக் கடுமையாக மீறும் செயலாகும். கடந்த பரீட்சைப் பெறுபேறுகள் மார்ச் 31 அன்றே வெளியானதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இம்முறை தயாராவதற்கு வெறும் 133 நாட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த 2024 இல் 178 நாட்களும், 2025 இல் 198 நாட்களும் அவகாசம் வழங்கப்பட்டிருந்த பின்னணியில் இம்முறை வழங்கப்பட்டுள்ள காலம் பெரும் அநீதியாகும்.
அதேபோல், முதலாம் முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் கடந்த காலங்களில் 27 முதல் 32 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இம்முறை வெறும் 21 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ‘டித்வா’ புயல் அனர்த்தம், ஆசிரியர் வேலைநிறுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் புத்தகங்கள் மற்றும் உடமைகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியானது, அரசமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ‘அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்ற விதியை நேரடியாக மீறுகின்றது.
கடந்த 2022 இலும் இதேபோன்றதொரு சவாலான சூழல் ஏற்பட்ட போது, அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சட்டபூர்வ நியாயங்களை ஏற்றுக்கொண்டு பரீட்சையை ஒத்திவைத்தனர்.
தற்போதைய திசைகாட்டி அரசும் அரசியல் பிடிவாதங்களை விடுத்து, மாணவர்களின் எதிர்காலம் கருதி மனிதாபிமானத்துடன் பரீட்சையை ஒத்திவைக்க முன்வர வேண்டும்.” – என்றார்.










