நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று (15) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
அதன்படி, மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம – நால வீதியின் ஹகுருகும்புக பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நால நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடது பக்கமாக நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை – வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் கேபிள் கம்பி ஒன்று இழுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, வெஹிகல திசையிலிருந்து கடுவலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த கேபிளில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த அவரது 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் வெஹிகல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய ட்ரக் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற லொறியின் உரிமையாளர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், தெல்விட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்விட்ட – கிரிபத்கல்ல வீதியின் கொடமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரிபத்கல்ல திசையிலிருந்து தெல்விட்ட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனரும், அதன் பின்னால் பயணித்த இரண்டு பெண்களும் தெல்விட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெல்விட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










