டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை சுமார் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மொத்தம் 34 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த அக்கரப்பத்தனை, வேவல்லி தோட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் எஸ். சிவபாலன் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.அதேபோல், மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த 66 வயதுடைய பி. லூக்ஸ் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்த ஏனையவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.










