இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டித் தீர்வை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேலும் வட பகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக ரீதியான துறைமுகமாகச் செயற்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
இந்தியத் தூதுவருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு 6 கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் தூதுவரின் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இம்மாத இறுதிக்குள் ஆளும் தரப்பான தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் இந்தியத் தூதுவருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.










