“தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்காகத் தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.” – என்று வலியுறுத்தி அவர்களுடன் பேச்சுக்களை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் இன்று தமிழகம் விரைந்துள்ளனர்.
இந்தப் பயணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசாங்கம் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களைச் சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்.
அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது.
இந்த நோக்கத்துக்காகத் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து மேற்படி விடயங்களைத் தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இந்த வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளோம்.” – என்றார்.
தமிழகம் விரைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஷ், ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ், பிரச்சாரச் செயலாளர் சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோருடன் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.










