சில அரச திணைக்களங்கள் மொழி வேற்றுமையுடன் செயற்படுவதாகவும், கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் வெறும் பெயருக்காக உருவாக்கப்பட்டதா? எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று (10) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,’கிளீன் ஶ்ரீலங்கா எனும் இந்தத் திட்டத்தின் நோக்கம் சூழலை துப்பரவாக்கல் மட்டுமல்ல. இது ஒரு தூய்மையான சமூகத்தை கட்டியெழுப்பும் திட்டமாகவே பார்க்கிறேன். கையூட்டல் இல்லாத, ஊழலில்லாத, போதையற்ற, இனவாதமற்ற, மொழிவாதமற்ற, மதவாதமற்ற, சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு இலங்கையை உருவாக்கும் முயற்சியே இத்திட்டமாகும்.
ஆனால் எமது பிரதேசத்தில் என்ன நடக்கிறது? சில திணைக்களங்கள் குறிப்பாக வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை ஆகியன மொழி வேற்றுமையுடன் எமது மக்களை பார்க்கின்றார்கள், கையூட்டல் வாங்குகிறார்கள்.
திரிவைத்தகுளம் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலம், நிலச்சொந்தக்காரர்களால் அக்காணிகளில் பயிரிடமுடியாமல் வனவள தினைக்களமும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஆனால் அயல் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் எந்தவித அனுமதியுமின்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை துப்பரவு செய்கிறார்கள். தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களை அத்துமீறி பயிர் செய்கிறார்கள். பாரிய காடழிப்பிற்கும் அத்துமீறி தமிழர்களின் விளைநிலங்களில் பயிர் செய்கையில் ஈடுபடுவதற்கும் அரச தினைக்களங்கள் உடந்தையாக இருக்கிறார்கள். திட்டமிட்ட குடியேற்றத்திற்கு உதவுகிறார்கள்.
இந்த செயற்பாடு இன்றும் நடைபெறுகின்றது. மேற்குறிப்பிட்ட முக்கியமான அரச திணைக்களங்களின் ஆசிர்வாதத்துடனேயே இது நடக்கின்றது’ எனத் தெரிவித்தார்.










