புதிய அரசாங்கம் மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் நம்பிக்கையும் – தமிழர் பிரதிநிதிகளின் அதிருப்தியும்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் ஊடாக உண்மை மற்றும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தமிழர் தரப்பினரால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் ஆட்சி மாற்றமும் அரசியல் கலாச்சார மாற்றங்களும் நிகழ்ந்துள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நகர்வானது தமிழர்கள் விவகாரத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை உறுதிப்படுத்துவதில் உள்ளக விசாரணைகளின் ஊடாகவே நகர வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக புதிய அரசாங்கம் அளித்திருக்கும் வாக்குறுதி குறித்து அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதேவேளை, கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஆக்கபூர்வமானதும், வலுவானதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகவும், தமிழ் மக்களின் இந்த பிரச்சினைக்கு தாம் நிரந்தரமான தீர்வுகளை பெற்றுத்தரும் நோக்கிலேயே செயற்பட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமையும், இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதுடன் – தாம் உள்ளக ரீதியில் நியாயமான விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறவுள்ளமை இனப்படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்தும் சர்வதேச தரப்பின் தலையீட்டை வலுவிழக்கச்செய்யும் விதமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முற்கூட்டிய வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விடயங்களாவன.
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்களாவன.
இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நவம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகளவு ஆசனங்களை வென்றதன் ஊடாக ஆக்கபூர்வமான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு மக்கள் ஆணை வழங்கினர். அத்தோடு பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டமையானது 1994 ஆம் ஆண்டின் பின்னர் பெண்ணொருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக அமைந்தது.
அதுமாத்திரமன்றி இத்தேர்தலில் 22 பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானதன் ஊடாக பெண் பிரதிநிதித்துவம் 9.8 சதவீதத்தினால் அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து அரசியல், சட்ட மற்றும் பொருளாதார ரீதியான சவால்களின் விளைவாக ஏற்பட்ட காலதாமதத்தின் பின்னர் இவ்வருடம் மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 43.2 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன் வட, கிழக்கு மாகாணங்களின் ஆதிக்கத்தை தமிழ்க் கட்சிகள் மீளக் கைப்பற்றின. இருப்பினும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தல்கள் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்படவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கொள்கைப்பிரகடன உரையாற்றிய ஜனாதிபதி பல தசாப்தகால இனவாத அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக மிக மோசமான பாதிப்புக்களும், துன்பங்களும் நேர்ந்தன என்பதை ஏற்றுக்கொண்டார். அதேபோன்று நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதாகவும் பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், ஊழல் மோசடிகளைக் கையாளல், சுயாதீன குற்றவியல் அலுவலகத்தை ஸ்தாபித்தல், உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் ஏனைய முக்கிய குற்றச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன உள்ளிட்ட நீண்டகால மனித உரிமைகள்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இப் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. அதுமாத்திரமன்றி சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக்கூடியதும், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை சகல உள்ளுராட்சி, மாவட்ட மற்றும் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடியதுமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளடங்கலாக சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் இல்லாதொழிப்பதாகப் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அச்சட்டத்தை முற்றாக நீக்குவது குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமென கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அத்தோடு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை அனுப்பி வைப்பதற்கு பொதுமக்களுக்கு வெறுமனே இரண்டு வார கால அவகாசத்தை வழங்கும் அறிவிப்பு கடந்த மே மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. அப்புதிய சட்டமூலத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதேபோன்று நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தியமைப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பினும், அச்சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் இவ்விரு சட்டங்களும் நிகழ்நிலை முறைமையிலும், நேரடியாகவும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வெகுவாக மட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்த காலத்தில் சர்வதேச குற்றங்கள் உள்ளடங்கலாக மிக மோசமான மீறல்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்வதும், அது குறித்து உரியவாறான தீர்வை வழங்குவதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதும் அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையையும், நீதியையும் உறுதி செய்வதற்குத் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவரது கொள்கைப் பிரகடன உரையில் குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கருத்தானது செயல் வடிவம் பெறுமாயின், அதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்டதொரு வாய்ப்பு கிட்டும். இருப்பினும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்வதுடன், கடந்தகால மீறல்களுக்கு வழிகோலிய கட்டமைப்பு ரீதியான நிலைமைகள் மாற்றமின்றிக் காணப்படுகின்றன.
அடுத்ததாக சகல தரப்பினருடனான கலந்துரையாடல்களின் பின்னர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தவேண்டுமெனில், நிலைமாறுகால நீதி தொடர்பான வெளிப்படையானதும், நியாயமானதுமான கலந்துரையாடல்கள் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் அரசாங்கம் முதலில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அத்தோடு கடந்த பல வருடகாலமாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஏனைய ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக அக்கட்டமைப்பினைக் கட்டியெழுப்ப வேண்டும்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருக்கும் பின்னணியில், அத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் எனக் கண்டறிதல் உள்ளடங்கலாக அதுகுறித்து சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான பரந்துபட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவசியமான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருக்கிறது. பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதும், மோதலுக்கான அடிப்படைக் காரணங்களைக் களைவதும் அரசாங்கத்தின் இலக்கான தேசிய ஒருமைப்பாட்டை அடைந்து கொள்வதற்கு மிக அவசியமாகும்.
அத்தோடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதன் ஊடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணைக்கு எந்த அவசியமும் இல்லை.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, முன்னைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கம் எந்தவித ஏமாற்று வேலைகளையும் செய்யாது எனவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுத்து உண்மைகளை கண்டறிய வேண்டிய தேவை இனி ஏற்படாது, இந்த அரசாங்கம் முறையான உள்ளக விசாரணைகளின் ஊடாக உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை கையாளும் எனவும் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாகவும், ஜனாதிபதியே இந்த வாக்குறுதிகளை அங்கு வழங்குவார் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை குறித்து தமது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இவ்வறிக்கை தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறைக்கு வழிகோலுமா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மூன்று தசாப்த கால யுத்தத்தினால் தமிழ் மக்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை முன்னேற்றகரமானதாக அமைந்திருக்கிறது எனக் கூறுவதை விடவும், ஏற்கனவே இருந்த விடயங்களைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு முனைகிறார்கள் என்றே கூறமுடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை குறிப்பாக மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் செயற்பட்டு வருகிறது. இருப்பினும் மூன்று தசாப்தகால யுத்தத்தினால் தமிழ்மக்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள் என்ற விடயம் இவ்வறிக்கையில் எந்தவொரு இடத்திலும் தெளிவாகச் சுட்டிக்காட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்டோர் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்வதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி விசேடமாகக் கூறப்படவில்லை,
அதுமட்டுமல்ல, பங்கரவாதத் தடைச்சட்டத்தின் தொடர் பிரயோகம் மற்றும் அச்சட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினர், செயற்பாட்டாளர்கள், ஊடவியலாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் திட்டமிட்டு இலக்குவைக்கப்படல் என்பன குறித்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொட்டுச் சென்றிருந்தாலும், அதற்குரிய நீண்டகால அடிப்படையிலான தீர்வு பற்றி அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் இவ்வாறு அறிக்கை வெளியிடுவதும், விவாதிப்பதும், கடந்து செல்வதுமாக இருக்க முடியாது. எனவே இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது எமது வேண்டுகோளாக இருக்கிறது எனவும் சிறீதரன் தெரிவித்தார்.
அவ்வறிக்கையானது உள்ளகப் பொறிமுறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

அதேவேளை உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டார்.
குறிப்பாக அவ்வறிக்கையானது உள்ளகப் பொறிமுறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், சுயாதீன குற்றவியல் அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு வலியுறுத்தப்பட்டிருப்பது அதற்குச் சிறந்த உதாரணமாகும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பது சந்தேகமே.!

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கியமான விடயங்கள் வரவேற்கத்தக்கவையாகும். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் 105,000 க்கும் மேற்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த 4 வருடகாலத்தில் சேகரிக்கப்பட்ட 34,000 தரவுகள் மற்றும் ஆதாரங்களில் அதில் உள்ளடங்குவதாகவும் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன்,
இருப்பினும் இவ்வாறு திரட்டப்பட்ட ஆதாரங்கள் உரியவாறு ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தப்படவேண்டும். அதன்படி இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சர்வதேச நீதி விசாரணைப்பொறிமுறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் அதன்கீழ் கொண்டுவரப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் அவ்வாறானதொரு சர்வதேச பொறிமுறை பற்றிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை. மாறாக இவ்விடயத்தில் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின்மீது ஓரளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் இப்புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இதுவரையில் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கையையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே உயர்ஸ்தானிகரின் இந்த அறிக்கை, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான நீதிப்பொறிமுறைக்கு வழிகோலுமா என்ற கேள்வி தொக்கு நிற்கிறது என்றார்.










