பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸார், கடற்படை அதிகாரி, மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள், கிராம சேவையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது தீர்க்கப்படாத பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. பளை பிரதேச வைத்தியசாலையில் குறைபாடுகள் உள்ளது தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் அவர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன சிறு சிறு வைத்திய தேவை உடையவர்கள் கூட கிளிநொச்சி அல்லது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றார்கள் எனவும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சிலர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் இனிவரும் காலங்களில் இச்சம்பவம் இடம்பெறாதிருக்க வைத்தியசாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் பளையில் சில பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் பலர் பாதிக்கப்படுவதாகவும் மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சிலர் தெரிவித்த கருத்துகளுக்கு அமைவாக பதிலளித்த பளை மின் பொறியியலாளர் தெரிவிக்கையில், பிரதேச சபையின் பொது வீதிகளாக இருப்பினும் பகுதிகளுக்கு 100 மீற்றர் அல்லது 110 மீற்றர்களுக்கு உட்பட்ட பகுதியில் மின் இணைப்பு வழங்கக்கூடிய வகையில் காணப்படுமாயின் விரைவாக குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்க முடியும். அதற்கான நடவடிக்கை மின்சார சபையினரால் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் பளை பகுதியில் உள்ள சிறிய குளங்களின் அணைக்கட்டுகளை புனரமைப்பதாக கூறி அப்பகுதியில் உள்ள குளங்களின் மண் வளங்கள் வேறு பகுதிக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சில பொது அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத மண் அகழ்வு கிலாளி பகுதியில் இடம்பெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்த பளைப் பகுதியில் புதிதாக பதவியேற்றுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டவிரோத மணல் அகவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவையினர் A9 பிரதான வீதிகளில் காலை வேளையில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது செல்வதனால் பல மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாத காரணத்தினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிகப்படுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இளங்குமரன் அவர்கள் தெரிவிக்கையில்,
இவ்விடயங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் உரிய தீர்வினை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இன்றைய 26.06.2025 பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சில அரசு அதிகாரிகள் வருகை தராத காரணத்தினால் அவர்களது விடயங்கள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
















