“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றது. இது உள்ளூராட்சி சபைகள் தொடர்பான தமிழ்க் கட்சிகளின் தொடக்க காலக் கோட்பாட்டை முழுமையாக மீறும் செயல். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இந்த அணுகுமுறையைத் இலங்கைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் தெரிவில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கில் உள்ள எந்தவொரு சபையிலும் ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் எல்லாத் தமிழ்க் கட்சிகளும் தொடக்கம் முதலே ஓர் இறுக்கமான கொள்கைக் கோட்பாடாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றன.
இந்தக் கோட்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு முழுவதும் எந்தப் பிசிறுமின்றிப் பின்பற்றி வந்திருக்கின்றது. இதுநாள் வரையில் ஏனைய தமிழ்க் கட்சிகளும்கூட அதனைப் பின்பற்றி வந்திருந்தன.
ஆனால், இந்த அடிப்படைக் கோட்பாட்டுக்கு முரணாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றது. இது உள்ளூராட்சி சபைகள் தொடர்பான தமிழ்க் கட்சிகளின் தொடக்க காலக் கோட்பாட்டை முழுமையாக மீறும் செயல்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இந்த அணுகுமுறையைத் இலங்கைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. அவர்களின் இந்தச் செயல் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் முரணானது.
‘கொள்கைக்கூட்டு’ என்று முழங்கியவர்கள் இப்போது அடிப்படைக் கோட்பாட்டையே தகர்த்து தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்திருப்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல்.” – என்றுள்ளது.










