இலங்கையில் தற்போதைய சூழலில் எவ்வித நட்டமும் இன்றி பெற்றோல் விலையை 125 ரூபாவாலும், டீசல் விலையை 110 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கியதாக அரசு கூறி வருவது முற்றிலும் பொய்யானதாகும். ஒரு லீற்றர் எரிபொருள் விலையை 600 முதல் 700 ரூபாய் வரை உயர்த்தியிருக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், ஆனால் மக்களைக் கருத்திற்கொண்டு அவ்வாறு செய்யவில்லை என்றும் அரசு நாடகமாடுகின்றது. இத்தகைய ஏமாற்று அறிவிப்புகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆலோசகரும், எரிபொருள் ஆய்வாளருமான சிரில் சல்காதுவின் நேரடித் தலையீட்டுடன் இலங்கைக்கு மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அரசு அதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு, அவசர தேவைகளுக்கான உடனடிக் கொள்முதல் திட்டத்தின் கீழ் அதிக விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவே அரசு முற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை முற்றிலும் மீறி, மக்களின் பணத்தைச் சூறையாடும் நோக்குடன் மட்டுமே இந்த எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி அரசு விலையை உயர்த்தியுள்ளது.
தற்போதைய விலை உயர்வுக்கு முன்பாக, ஒரு லீற்றர் பெற்றோல் 234 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசல் 280 ரூபாவுக்குமே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், கச்சா எண்ணெய் பரல் ஒன்று உலகச் சந்தையில் 7.5 டொலர் குறைவாகவே கிடைத்துள்ளது. இவ்வளவு குறைந்த விலைக்கு எரிபொருளைப் பெற்றுக்கொண்டு, அரசு மக்களுக்கு அதிக விலைக்கு அதனை விற்பனை செய்கின்றது. தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், மக்களின் பணத்தைச் சுரண்டவுமே அரசு விலையைக் குறைக்காமல் நாடகமாடுகின்றது.
எரிபொருள் விலை தொடர்பாக அரச தரப்பினர் முரண்பட்ட கருத்துக்களைக் கூறி மக்களைக் குழப்புகின்றனர். ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் விலை குறைக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார். பழைய எண்ணெயை அதிக விலைக்கு வாங்கியதால் விலையைக் குறைக்க முடியாது எனப் பிரதமர் கூறுகினறார். ஆனால், மார்ச் மாதத்தில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்று ஜனாதிபதி கூறியிருந்தார். மார்ச் 28 அன்று வரவிருந்த கப்பலில் ஒரு பரல் கச்சா எண்ணெயை 4.8 டொலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதிலும், அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்துவிட்டு, ஒரு பரலை 40 முதல் 50 டொலர் என்ற அதிக விலைக்கு வாங்க அரசு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சிபெட்கோ 36 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதுடன், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மேலும் 2 பில்லியனுக்கும் அதிக இலாபம் கிடைத்துள்ளது. இவ்வளவு இலாபம் இருந்தும், மக்களின் பணத்தைச் சூறையாடவே அரசு விலையை உயர்த்தியுள்ளது.
தற்போது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருளின் ஒக்டேன் அளவு 92 ஆக இல்லை, அது 80 முதல் 90 இற்கு இடைப்பட்ட அளவிலேயே உள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் WTI கச்சா எண்ணெய் தரம் குறைந்ததால், சுத்திகரிப்பு நிலையத்தில் சரியான ஒக்டேன் அளவைப் பெற முடிவதில்லை. சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை அதிக விலைக்கு வாங்கிய பெற்றோலுடன் கலப்பதற்குப் பெருமளவு பணத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வீணடிக்கின்றது. அரசு சுத்திகரிப்பு எரிபொருளின் விலைப் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்துவதில்லை.
நாட்டில் எரிபொருள் விலை 6 முறை உயர்த்தப்பட்ட போதும், வாடகை வாகன ஓட்டுநர்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால், பகுதி நேரமாக வாடகை வாகனங்களை ஓட்டிப் பிழைப்பு நடத்தும் தொழில் வல்லுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான எரிபொருளைத் துஷ்பிரயோகம் செய்து, 6 இலட்சம் ரூபாய் வரை சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எதிராக ஜனாதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேசத்துரோகக் குற்றம் புரிந்த ஒருவரையே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக அரசு நியமித்துள்ளது. எரிபொருளின் ஊடாக மக்களை இவ்வாறு சுரண்டும் ஒரு விலை சூத்திரத்தை உலகத்தில் வேறு எந்த நாடும் பயன்படுத்தவில்லை.” – என்றார்.










