காவி உடை உடுக்கவே பொருத்தமில்லாத சிலரால் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகள் நிலஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுவதாகவும், வடபகுதியில் நீதிமன்ற கட்டளைகளைமீறி, அத்துமீறி கட்டியெழுப்பப்பப்படும் விகாரைகள் ஒருபௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லா மதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்கமுடியும் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (17.03.2025) இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் மீதான 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள புத்தர்சிலை விவகாரம், கொக்கிளாயில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரை விவகாரம், குருந்தூர்மலையில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரை விவகாரம், வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் வழிபாடுகள் தடுக்கப்படுகின்ற விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சர் அவர்களே, பிரதியமைச்சர் அவர்களே,
தற்போது அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனவாத கருத்துக்களைத் தெரிவிக்காது, எல்லோரையும் அணைத்துக்கொண்டு செல்லவேண்டுமென்ற எண்ணத்துடன் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது.
குறிப்பாக பெரும்பான்மையின் மக்களில் பெரும்பாலானவர்கள் கூட இனவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்குச் சான்று தற்போதைய அரசாங்கமாகும். இதற்கு முன்னர் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம்கொண்டிருந்த தற்போதய அரசாங்கம் 159 ஆசனங்களைப் பெற்று ஆட்சிபீடத்திலுள்ளீர்கள். இதற்கு முன்னர் இருந்த சில இனவாதிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
நான் வன்னித் தேர்தல்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவன். அந்தவகையில் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் பிரச்சினைகளைத் தெளிவாக சொல்கின்றேன்.
இந்த நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும் என்ற நோக்குடன்தான் நாம் செயற்படுகின்றோம். அந்தவகையில் உங்களின் ஒத்துழைப்பை நாடுகின்றோம். ஒரு நீதியானதும், நேர்மையானதுமான ஆட்சி அமைந்து நாடு முன்னேற்றம் அடையும் விடயத்தில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை. அதற்கு எமது ஒத்துழைப்புக்களும் இருக்கும்.
இந்துத் தம்பதிகளான சுத்தோதனருக்கும் மாயாதேவிக்கும் பிறந்து யசோதரையைத் திருணம்செய்த சித்தாத்தரே புத்தபிரான் ஆவார். அவரது போதனைகளை பின்பற்றி அவரது பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுகுவோர் பௌத்தர்கள் எனப்பட்டனர். இந்து மதமும், பௌத்த மதமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. தென்ஆசியாவின் பிரதான மதங்களான இவை, தென்னாசியா எங்கும் இணைமதங்களாகவே அனுஸ்டிக்கப்படுகின்றன. ஒத்தியைவுடன் ஓம்பப்படுகின்றன.
ஆனால் இலங்கையில் மட்டும் அவ்வாறு இல்லை. இங்கு புத்தபிரானின் போதனைகளையும் அவரது பஞ்சசீலக் கொள்கைகளையும் கைவிட்ட சில பௌத்ததுறவிகள் அவர்களின் பின்நின்று இயக்கும் சில அரசியல்வாதிகளின் தயவுடன் இந்த நாட்டில் அமைதியின்மையையும், இன முறுகலையும் தொடர இண்டும் என நினைத்து வரும் சில ஏகாதிபத்தியவாதிகளின் தயவால் எதேச்சதிகாரம் பெற்று சட்டத்தையும், ஒழுங்கையும் கையிலெடுத்து தமிழர் பகுதிகளில் பல்வேறு எதேச்சதிகாரங்களைப் புரித்து இலங்கையில் மத நல்லிணக்கம் என்பன இல்லாதொழிதுள்ளார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இனப்பரம்பல் வீதத்தை மாற்றி அமைக்கமுயலும் பேரினவாத சக்திகளின் ஊதுகுழல்களாக செயற்பட்டுவரும் இந்தப் பௌத்தப் போக்கினைக் கடைப்பிடித்துவரும் சில பௌத்த பிக்குகள் இலங்கையின் அரச திணைக்களங்களான, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு படைகள் என்பவற்றை வெளிப்படையாகவே வழிநடத்தி வருவது கடந்த காலத்தில் வெளிப்படையாகவே அவதானிக்கப்பட்டது.
(அ) நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவில், நாயாற்றுக்கு அண்மையில் உள்ள பழைய செம்மலை பிள்ளையார் ஆலயத்தை குருகந்த ரஜ மகாவிகாரை எனக்கூறி கொலம்பகே மேதானந்த கீர்த்திசிறி தேரர் என்ற பௌத்த துறவி, ஆலய வளாகத்திற்குள் கட்டடம் ஒன்றை அமைக்கத் தொடங்கினார். இக் கட்டட வேலைகளை இவ்ஆலயத்தின் எதிர்த்திசையில் இருந்த இராணுவ முகாமின் இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
இதுதொடர்பில் 31823 இலக்கத்தில் வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று 2019.05.06இல் வழங்கப்பட்ட கட்டளைப்படி குறித்த இடத்தில் ஏதேனும் செயற்பாடுகள் செய்வதானால் சமாதானத்தைப்பேணி நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவேண்டும் என நீதிமன்றால் கட்டளையிடப்பட்டது. இருந்தபோதும் பிரதேசசபையின் தடைஉத்தரவையும் மீறி இவ்ஆலயத்தில் கொலம்பகே மேதானந்த கீர்த்திசிறீ தேரரால் பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. நீதிமன்ற கட்டளையைமீறிய இந்த நடவடிக்கையை இந்தநாட்டின் சட்டம் ஒழுங்கு வேடிக்கை பார்த்திருந்தது.
சில நாட்களின் பின்னர் இந்த கொலம்பகே மேதானந்த கீர்த்திசிறீ தேரர் மரணமடைந்தார். இவரது உடலை கடற்கரையில் அடக்கம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றும் கட்டளையிட்டது. அந்தக்கட்டளையைமீறி ஞானசாரதேரர் தலைமையான பௌத்த துறவிகள் குழு அவ்வுடலை பழைய செம்மலை பிள்ளையார் ஆலய தீர்த்தக்குளத்தில் அடக்கம் செய்தனர். எதிர்த்து நின்ற தமிழ்மக்களையும், சட்டத்தரணிகளையும் இலங்கைப் பொலிசார் துரத்தி துரத்தி அடித்தனர். பொலிசாரால் தாக்கப்பட்டு ஆலய பூசகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு பகிரங்கமாக வேட்டு வைக்கப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும்.
(ஆ) கொக்கிளாயில் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை விவகாரம்
முல்வைத்தீவு கொக்கிளாய் கிராமத்தில் நீதிமன்றக்கட்டளைகள் மீறப்பட்டு பௌத்தவிகாரை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1983இல் இடம்பெயர்ந்து, 2011இல்தான் இங்கு மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டார்கள். மணிவண்ணதாஸ் குடும்பமும் இங்கு மீள்குடியமர சென்றார்கள். மணிவண்ணதாஸின் தந்தையார் திருஞானசம்மந்தர், இதுக்கு காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட காணியின் அனுமதிப்பத்திரம் உண்டு.
ஆனால் மணிவண்ணதாஸ் குடும்பம் இங்கு மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை. அவரது குடும்பம் இராணுவத்தால் துரத்தியடிக்கப்பட்டது. அந்தக் காணியில் விகாரை ஒன்று கட்டப்பட்டது. பல்வேறு தடையுத்தரவுகளையும் மீறி இன்று வரை கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. மணிவண்ணதாஸ் குடும்பம் இன்றுவரை தமது சொந்தக்காணியில் மீள்குடியமர முடியவில்லை. தாம் பிறந்த மண்ண்ணில் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தாய், தந்தையை அன்புமனையாள் யஞ்சாதரை, அருமைப்பாலகன் இராகுலனைத் துறந்து போதி மரநிழலில் பரிநிர்வாணம் அடைந்த போதிமாதவன் புத்தபிரான் சிலையாய் அமர்வதற்காக மணிவண்ணதாஸ் அவரது மனைவி, குழந்தைகள், துரத்தியடிக்கப்பட்டு அவர்களுடைய பரம்பரை வாழ்ந்த பூர்வீகநிலம் பறிக்கப்பட்டு ஏதிலிகளாகத் துரத்தப்பட்டிருக்கின்றனர்.
இதையா புத்தர் போதித்த பஞ்சசீலக் கொள்கை வழிநடப்பவர்கள் செய்வார்கள். புத்தருடைய ஆன்மா இச்செயலால் வெட்கித்தலை குனிந்து நிற்கும். வடக்கிலும், கிழக்கிலும் ஞானசாரதேரர் அவர்வழி நிற்கும். காவி உடை உடுக்கவே பொருத்தமில்லாத சிலரால் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகள் நிலஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன. கடவுளாக அல்ல.
(இ) குருந்தூர்மலை விவகாரம்
குருந்தூர்மலை, அது ஒருதொல்லியல் பிரதேசம் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். விடுதலைப்புலிகளின் காலத்தில் அங்கிருந்த தொல்பொருட் சின்னங்களுக்கு இம்மியளவுகூட பங்கமேற்படவில்லை. அங்கு தொல்பொருள் சின்னங்களுள் ஒன்றாய் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த திரிசூலம் ஒன்று காணப்பட்டது. அது பல நூற்றாண்டுகளாகவே சுற்றயல் கிராம மக்களால் வழிபடப்பட்டு வந்தது. கிராமிய முறையில் பொங்கல் செய்து படையலிட்டு பயபக்தியுடன் இம்மக்களால் வழிபடப்பட்டு வந்தது. ஆனால் இன்று பிடுங்கி எறியப்பட்டு இந்துமத வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
அங்கு புத்தர்சிலை ஒன்றை வைப்பதற்காக கல்கமுவ சந்தபோதிதேரர் தலைமையிலான குழுவினர் ஒரு புத்தர்சிலையுடன் வாகனங்களில் வந்தபோது அப்பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அமைதிக்குலைவு ஒன்று அப்பிரதேசத்தில் ஏற்பட்டதென்று பொலிசாரால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. AR 673/18 இலக்கத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் மீதான கட்டளையானது 2018-09.27ஆம் திகதிய வழங்கப்பட்டது.
அக் கட்டளையில், இப்பிரதேசம் தொல்லியல் இடமாகக் காணப்படுவதாகவும், அப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைகழக தொல்லியல் விரிவுரையாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் தொல்லியல் ஆய்வுகளில் இணைக்குமாறு தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.
ஆனால் இன்றும் இப்பிரதேசத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகமின்மையுடன் தொல்லியல் ஆய்வுகள் தொடர்கின்றன. வெளிப்படைத் தன்மையையும், நடுநிலைமையையும் கோசமாகக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் காலத்திலும் குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளைக்கு முரணாக வெளிப்படையற்ற செயற்பாடுகள் தொல்லியல் ஆய்வுகள் என்ற போர்வையில் தொடர்கின்றன.
குருந்தூர்மலையில் கல்சமுவ சந்தபோதி தேரரரின் வழிகாட்டலில் தொல்பொருள் திணைக்களத்தினரால் இலங்கை பொலிசாரினதும், இராணுவத்தினதும் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்கள் பௌத்த தர்மத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் தொல்பொருள் சட்டத்திற்கும் முற்றிலும் முரணானவை .
இது பற்றி இன்றும் விலாவாரியாக விபரிப்பதற்கு எனக்கு தரப்பட்ட நேரம்போதாது. ஒருதொல்பொருள் இடமாகக் காணப்பட்ட அந்தப் பிரதேசம் நீதிமன்றங்களின் பல்வேறு கட்டளைகளை மீறி இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகின்ற தொல்பொருள் சட்டங்களையும்மீறி தொல்பொருள் திணைக்களத்தால் ஒருவிகாரையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அவர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக தனது பதவியை துறந்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசால் தொல்லியல் இடமாக வர்த்தமானப்படுத்தப்பட்ட குருந்தூர்மலையில், தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கபோக் கற்களாலும், சீமேந்தாலும் கட்டி எழுப்பப்பட்ட விகாரை ஒரு பௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னமாகும். ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு இது தொடர்பில் என்ன பொறுப்புக் கூறப்போகின்றது.
குருந்தூர்மலைப் பிரதேசத்தில் இருந்து பிடுங்கிச் செல்லப்பட்ட ஆதிசிவனின்சூலம் மீளவும் இப்பிரதேச இந்துக்களிடம் ஒப்படைக்கப்படுமா? இங்கு தடையின்றி வழிபாடுகளைத் தொடர இந்துக்கள் அனுமதிக்கப்படுவார்களா?
(ஈ) வெடுக்குநாறிமலை விவகாரம்
வவுனியா மாவட்டத்தில், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை வன்னியில் வாழும் இந்துக்களின் ஆதிவழிபாட்டுத்தலமாகும். கடந்த வருடம் இங்கு சிவராத்திரி வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் இலங்கைப் பொலிசாரால் துரத்தியடிக்கப்பட்டனர். இங்கு வழிபாடு மேற்கொண்ட பரம்பரை பூசாரியும் இன்னும் 14 பேரூம் சிவராத்திரியை வெடுக்குநாறிமலையில் அனுஸ்டித்ததற்காக, இரண்டு வாரங்கள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தவருடமும் சிவராத்திரி பூசைகள் மாலை 06.00மணிக்கு பின் தொடர அனுமதிக்கப்படவில்லை.
இலங்கைத்தீவில் தமிழ் இனத்திற்கு எதிராக, அவர்களுடைய வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு, அவர்களுடைய மரபு உரிமைகள் சிதைக்கப்பட்டு அம்மக்கள் நசுக்கப்பட்டு வரும் நிலமை இன்னமும் தொடர்ந்து வருகின்றது. பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லா மதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்கமுடியும். இதுவே இலங்கையில் தொடரும் பௌத்த மேலாதிக்க ஆட்சியின் ஊழலின் சின்னம்.
இந்த நாட்டிலுள்ள இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் நான்கு மதங்களையும் ஒன்றாகப் பாருங்கள். அனைத்துமத மக்களையும் அணைத்துகொண்டு பயணியுங்கள்.
குறிப்பாக வன்னியிலும், யாழப்பாணத்திலும் உள்ள மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு அதிகளவில் தமது வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். சிங்கள மக்களையும், பெரும்பான்மையின மக்களையும், கட்சிகளையும் அவர்கள் வெறுத்திருந்தால் அவர்களால் எப்படி இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க முடியும். எனவே அந்த மக்களை புறக்கணிக்காதீர்கள்.
எமது வழிபாட்டிடங்களில் எம்மை வழிபடவிடுங்கள். அதேவேளை பௌத்தர்கள் அல்லாத இடங்களில் எதற்கு பாரிய பௌத்த விகாரைகள், இராணுவ முகாம்களில் பாரிய விகாரைகள் கட்டப்படுகின்றன. கடந்தகால ஆட்சியாளர்கள் இனவாதப் போக்குடன் அராஜகமான போக்குடன் செயற்பட்ட நிலமைகளை இந்த அரசாங்கம் நீக்கவேண்டும். அமைச்சர் எமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மதத்திணிப்புக்கள் தொடர்பில் நேரடியாக வந்து பார்வையிடவேண்டும். அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் – என்றார்.