மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உணவு விடுதிகள் மற்றும் உணவு உற்பத்தி நிலையங்களில் நேற்று(11) மாலை பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் அதிகளவான மக்கள் வசிக்கும் மாமாங்கம் பொதுச்சுகாதர பிரிவு மற்றும் இருதயபுரம் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.பகீரதன் மற்றும் இருதயபுரம் பொதுச்சுகாதார பரிசோதகர் என்.கருணாகரன் ஆகியோர் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மாமாங்கம் பொதுச்சுகாதர பிரிவில் சுமார் 10 உணவு விற்பனை நிலையங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் மூன்று விற்பனை நிலையங்களுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று இருதயபுரம் பொதுச்சுகாதார பிரிவில் சுமார் 23 உணவு விற்பனை நிலையங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 13 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உணவு உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டதுடன் பாவனைக்குதவாத பொருட்களும் மீட்கப்பட்டன.





