யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேரவைக்கு வெளிவாரி உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியல் அழுத்தம் காரணமாகப் பெரும் இழுபறி நிலை தோன்றியிருப்பதாக அறியவருகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் – கடந்த 13ஆம் திகதியுடன் செயற்படும் வகையில் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பதவியில் இருந்த வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன கோரியிருந்தார்.
இதனையடுத்து, வவுனியாப் பல்கலைக்கழகம் தவிர்ந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவைகள் செயற்பட முடியாமல் முடங்கிப் போயிருந்தன. பல்கலைக்கழகங்களின் நாளாந்த நடவடிக்கைகள் தவிர, நேர்முகத் தேர்வுகள், நியமனங்கள், திட்ட அங்கீகாரங்கள் உட்பட எந்தவொரு தீர்மானங்களும் இயற்றப்பட முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த 24 ஆம் திகதி தென்.கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான வெளிவாரிப் பேரவை உறுப்பினர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்தனர். சமகாலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேரவைகளுக்கும் உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயாராக இருந்த போதிலும், வழமை போன்று – முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் நடைபெற்றது போல, கடைசி நேர அரசியல் அழுத்தம் காரணமாக பேரவை உறுப்பினர் நியமனம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஏற்கனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்கள் இரண்டு தடவைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னரும் கூடப் பட்டியலை வெளியிட முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒரு உறுப்பினர் அதிகமான எண்ணிக்கைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்படுவது வழமையாகும். பல்கலைக்கழகப் பேரவை ஒன்றின் வெளிவாரி உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் ஒரு பட்டதாரியாக இருத்தல் வேண்டும் அல்லது முகாமைத்துவத்தில் மீயுயர் தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற அடிப்படைத் தகுதியுடன், பால்நிலை சமத்துவம், சமய ரீதியான பிரதிநிதித்துவத்துடன், சமூக நலன் சார்ந்த உயர் சிந்தனையுடைய நபர்களையே வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்ற வரையறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வரையறுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், ஆட்சியதிகாரத்திலுள்ள கட்சிகளின் சிபார்சின் அடிப்படையிலேயே இதுவரை காலமும் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்று வந்துள்ளமையும், யாழ்பாணத்தில் மிக நீண்டகாலமாக அமைச்சர் ஒருவரின் செல்வாக்கில் நியமனங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.