நாடாளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் பலமான நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கொண்டமைந்த நாடாளுமன்றத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரசின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் பக்கம் நாம் முன்னிற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு தெரிவித்தார்.
நாடாளுமன்றக் குழுக்களில் கவனம் செலுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இங்கு சகல கட்சித் தலைவர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்து சுட்டிக்காட்டினர்.
கடந்த ஜனவரி 29ஆம் திகதியும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கூடி இதேபோன்ற கலந்துரையாடலை நடத்தியதோடு, இன்று நடைபெற்ற கலந்துரையாடலும் இதன் தொடர்ச்சியாகும்.
இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக (எதிர்க்கட்சியின் பிரதம கொறடா), ஜே.சி. அலவதுவல (எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்), அஜித் பி. பெரேரா (எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்), ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் சிறீதரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், வேலுசாமி இராதாகிருஷ்ணன், அனுராத ஜயரத்ன, டி.வீ.சானக மற்றும் காதர் மஸ்தான் முதலானோர் கலந்துகொண்டனர்.