எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளைத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ். அல்லைப்பிட்டிய பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில், அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சருக்கு மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், மீனவர்கள் இளைப்பாறுவதற்குரிய வசதிகள் இல்லை எனவும், உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் மக்கள் எடுத்துரைத்தனர்.
மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
அத்துடன், இலங்கையின் கடல்வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும் எனவும், அதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தனக்கான வரவேற்பு நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பினருக்கு அமைச்சர் நன்றிகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், மீனவ சங்க தலைவர் ‘ஞா.அன்டன், பங்குதந்தை ஜெகன்குமார் கூஞ்ஞ, கிராம சேவகர் ம.சசிகாந், பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.