முதுமைக்காலத்தில் ஏற்படும் வறுமையினை தணிப்பதனையும், மாணவர்களுக்கான கல்விசார் ஊக்குவிப்பினை வழங்குவதனையும் நோக்காகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியத்திட்டத்தில் வழங்கப்பட்ட பயனாளிகள் மற்றும் பணச்சேகரிப்பு ஆகிய இரண்டு மதிப்பீடுகளில் ஏதாவது ஒரு அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை தக்க வைத்துக் கொண்ட எமது மாவட்டம் இம்முறை இரு அடிப்படையிலும் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது என அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், தேசிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் இத்துடன் 11 தடவைகள் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளமை பெருமைக்குரியது எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் பயனாளிகளில் அரச உத்தியோகத்தரல்லாத 6,032 பயனாளிகள் தற்பொழுது 60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியத்தை பெற்றுவருகின்றனர் எனவும், மேலும் இத்திட்டத்தின் மூலம் 1,628 மாணவர்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவையும் பெற்று வருகின்றனர். எனவும், ஒவ்வொரு வருடமும் 300 தொடக்கம் 400 வரையான மாணவர்கள் இத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், புலமைப்பரிசில் தரம் 5, க.பொ.த (சாதாரணம்) மற்றும் க.பொ.த (உயர்தரம்) மாணவர்கள் ரூபா. ஐயாயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை இக்கொடுப்பனவை இத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பெற்றுவருகின்றனர் எனவும், அறிவித்துள்ளார்.
மேலும், தேசிய விருதுக்கான தெரிவில் நல்லூர், பருத்தித்துறை, கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய நான்கு பிரதேச செயலகங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும், யாழ் மாவட்டத்தில் தனிப்பட்ட அடைவு மட்டங்களில் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 9 உத்தியோகத்தர்கள் தேசிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.