திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதி விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்பானது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக இடம் பெற்றது.
முத்து நகர் பகுதியில் உள்ள விவசாய காணிகளை சூரிய மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
குறித்த கவனயீர்ப்பை முத்து நகர் ஒன்றிணைந்த அனைத்து விவசாய சம்மேளனங்கள் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பில் விவசாய காணியை அபகரிக்காதே, வயிற்று பசிக்கு சோலர் பவரா, மாவட்ட தலைவரே உங்கள் கவனத்திற்கு உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
குறித்த முத்து நகர் பகுதியில் ஐந்து சிறு குளங்களை கொண்ட 1600 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 1200 விவசாயிகள் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஏக்கருக்கும் மேற்பட்ட மேட்டு நிலப் பயிர்களை இதில் மேற்கொள்ளப்பட்டு சுமார் 5000 குடும்பங்கள் பயனடைகின்றனர்.
கடந்த வருடத்தில் (2024) வாரி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் குளங்களை திருத்த நிதி ஒதுக்கீடு செய்தது. தகரவெட்டுவான் குளம் 80 வீதம் திருத்தப்பட்ட நிலையில் இலங்கை துறை முக அதிகார சபையால் நிறுத்தப்பட்டது. இதே போல் அம்மன் குளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு, திருத்தம் செய்ய அனுமதியை மறுத்து தடுத்து நிறுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மஹஜர் ஒன்றினையும் கையளித்தனர். அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சோளர் பவர் திட்டத்தை எமது விவசாய பகுதிக்குள் நடை முறைப்படுத்தினால் குளங்கள் மூடப்படலாம் எப்படி அபிவிருத்தி செய்வது நாட்டுக்கு வருடந்தோரும் பெரும்போகத்தில் 1600 ஏக்கர் X70 புசல் = 112000 நெல்லை உற்பத்தி செய்து தரும் எமது வாழ்வாதார ஜீவனோபாய வயல் நிலங்கள் பறிக்கப்படுமாக இருந்தால் விவசாயிகளான நாங்கள் இத் திட்டத்தை எதிர்த்து போராடுவதன் மூலம் நம் உயிரை விடவும் ஆயத்தமாக உள்ளோம். எனவே தயவு கூர்ந்து இந்த வயற் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தி நாங்கள் வேலாண்மையை தொடர்ந்து செய்ய நிலத்தை விடுவித்து தாருங்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது மஹஜர் ஒன்றினை இன்றைய தினம் இடம் பெற்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மீமன, சண்முகம் குகதாசன் ஆகியோரிடத்தில் கையளித்தனர்.