மன்னார் நகர சபையின் ஊடாக பண்டிகைக் கால வியாபார நிலையங்கள் பகிரங்க குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாக மன்னார் நகர சபை அறிவித்துள்ளது.
மன்னார் நகரசபையின் பண்டிகை கால வியாபார நிலையங்களை ஏல விற்பனை மூலமாக 10 நாட்களுக்கு குத்தகைக்கு விடும் செயல்பாடு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) மன்னார் நகர சபை செயலாளர் தலைமையில் இடம் பெற்ற நிலையில் 300 கடைகள் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் நகரசபைக்கு 3 கோடியே இருபது லட்சம் ரூபா வருமானம் பெறப்பட்டதுடன் மேலதிகமாக 16 கடைகளுக்கான ஏல விற்பனை இடம்பெற்றது.
கடந்த வருடம் பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளின் போது 320 கடைகள் பகிரங்க ஏல விற்பனை ஊடாக 2 கோடியே 21 லட்சத்துக்கு வழங்கப்பட்ட நிலையில் இம்முறை 1 கோடி ரூபாய் மேலதிக வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.
குறித்த வருமானத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான மன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதுடன் மக்கள் பங்களிப்புடன் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.