மன்னார் நீதிமன்றத்தில் வைத்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் நேற்று முன்தினம்(5) மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(5) வவுனியா சிறைச்சாலை அலுவலர் மன்னார் நீதவான் நீதிமன்றில் கடமைக்காக வந்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை அலுவலர் மன்னார் நீதிமன்ற தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற பெண் ஒருவரிடம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை பார்வையிடுவதற்காக 1000 ரூபாய் பணத்தை பலவந்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த சிறைச்சாலை அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறைச்சாலை அலுவலர் நீதவான் நீதிமன்றில் வைத்து கைது செய்து விசாரணைகளின் பின்னர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (5) மாலை மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த சிறைச்சாலை அலுவலரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.