உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்காக 186.5 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.
இந்த மாகாணங்களில் அட்லாஸ் இன்டல் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன்படி அரிசோனாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கு 51.9 வீதம் பேரும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 45.1 வீதம் பேரும் ஆதரவு அளித்தனர்.
நெவாடாவில் ட்ரம்புக்கு 51.வீதம் பேரும், கமலாவுக்கு 45.9 வீதம் பேரும், நார்த் கரோலினாவில் ட்ரம்புக்கு 50.4 வீதம் பேரும், கமலாவுக்கு 46.8 வீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். ஏனைய 4 மாகாணங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.