சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் என கடந்த காலங்களில் இனங்காட்டியவர்கள் என்ன செய்தார்கள்? முஸ்லிம்களின் பிரச்சினைகளின் போது பயணித்தார்களா? என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியா மஹ்ரூப் நகர் பகுதியில் (27)இடம் பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், முஸ்லிம்கள் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த போது தங்களது சுய இலாபங்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார்கள் சமூகத்துக்காக போராடவில்லை என்பதை மக்கள் நன்கு புரிவார்கள். ஆகவே தங்களுக்குத் தேவையான அரசியல் தலைமைகளை சரியாக சிந்தித்து மக்கள் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பல கட்சிகள் மற்றும் பல வேட்பாளர்களால் குழப்பமடைந்துள்ளார்கள். அத்துடன் வரலாற்றில் பல கட்சிகளை கொண்ட வேட்பாளர்கள் புதிய சிந்தனை, புதிய கட்சிகள் ஊடாக களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்யும் நிலை ஏற்படலாம்.
ராஜபக்ச குடும்பம் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்கள். இது போன்று பாராளுமன்றத்தில் அரசியல் ஜாம்பவான் என்று நினைத்து செயற்பட்டவர்கள் மக்கள் மத்தியில் வர முடியாதளவுக்கு தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளார்கள். எனவே தான் நல்ல தலைவர்களுக்கு மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என்றார்.