யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் -எழுதுமட்டுவாழ் பாலம் அமைக்கும் பணியை கெளரவ வடமாகாண ஆளுநர் வேதநாயகம் இன்று ஆரம்பித்துவைத்தார். நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான நடுநிலைப் பாலம் 1959 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து புனரமைப்பு செய்யாமல் காணப்பட்டது
பாலம் அமைப்பதற்காக பலமுறை நிதி ஒதுக்கப்பட்டும் பிரதான பாலம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் எல்லைக் கோட்டுக்குள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அப்பகுதி கிராம மக்கள் எடுத்த தொடர் முயற்சியின் பலனாக மேலதிக அதிகாரிகள் தலையிட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதியுடன் பாலம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று கெளரவ வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கிராம மக்கள் பிரதிநிதிகள் சார்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் கருத்து தெரிவித்த போது பிரதான பாலத்திற்கு இரண்டு புறமும் காணப்படுகின்ற வீதிகளை நிரந்தரமான வீதியாக அமைத்து தென்மராட்சி,வடமராட்சி கிழக்கு மக்களின் இணைப்பை செய்து தருமாறும்,இது மிக பிரதானமாக அபாய வெளியேற்ற பாதையாகவும்,வணிக ரீதியான தேவைகள்,விவசாயிகள் பயன்டுத்தும் பாதையாக காணப்படுவதால் இதனை நிரந்தர வீதியாக அமைத்து தருமாறு கெளரவ ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த பொழுது முழு முயற்சி எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்,கிராம உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உறுப்பினர்கள்,பிரதேச முன்னாள் உறுப்பினர்கள்,பொறியியலாளர்கள்,கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.