போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழக அமைச்சர் சரத்குமார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான உள்கட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் மனிதவள முகாமைத்துவத் துறை அமைச்சராக சரத்குமார் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காணொளியில், அமைச்சர் சரத்குமார் கோக்கைன் உள்ளிட்ட போதைப்பொருளைப் பயன்படுத்துவதாகக் கூறி எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமைச்சர் சரத்குமார், உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தனது குழந்தைக்கு மாத்திரையை தூளாக்கி வழங்கியபோதுதான் அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துகள் மற்றும் காணொளிகள் பரவி வருகின்றன.
சட்டசபையில் பாதீடு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், ஏழு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் விஜய் தலைமையிலான அரசாங்கத்திற்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சம்பவத்தின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த உத்தரவின் அடிப்படையில், அமைச்சர் சரத்குமார் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைமையகம் விசாரணை நடத்தி வருவதாக எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் இறுதியில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அமைச்சர் சரத்குமார் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது.










