தற்போதைய அரசாங்கம் சுரேஷ் சலேயை குறிவைத்து, இறுதியாக ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.
சலகுண அரசியல் விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சாகர காரியவசம் முற்றாக மறுத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர்:
“2019ஏப்ரல் மாத்திலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. ஆனால் 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலிலேயே பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இணைந்திருந்தன.
அப்போதே எந்தவொரு தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றியைப் பெறுவதற்கான அரசியல் பின்னணி எங்களுக்குச் சாதகமாக ஏற்கனவே உருவாகியிருந்தது. எனவே, ஆட்சிக்கு வர இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை” என்றார்.
மேலும், நாட்டின் யாருக்காவது இந்தச் சம்பவம் குறித்து சந்தேகம் இருந்தால், அது குறித்து முறையான விசாரணை நடத்தி, சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதை தாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.










