அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
24 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பணிகள் மாலை 6 மணியுடன் நிறைவடைகின்றன என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதாவது கடை ஒன்று காலையில் திறந்தால் மாலை 6 மணிக்கு பூட்டுவது போன்று பொலிஸ் நிலையங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
எனினும் தற்போது ஆளணி பற்றாக்குறை நிலவுவதனாலேயே இவ்வாறு இலங்கை பொலிஸ் நிலைப்பாடு உள்ளது என அங்கலாய்க்கிறார்கள்.
ஆனால் காரைதீவு பொலிஸ நிலையம் கடந்த 2021 ஆண்டு மக்கள் நலன் கருதி திறந்து வைக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் பொது மக்களின் நன்மதிப்பை பெற்று ஒத்துழைப்புடன் இயங்கிய போதிலும் மக்கள் தற்போது குறை கூறும் வகையில் பொலிஸ் நிலைய செயல்பாடு அமைந்துள்ளது.
மேலும் டிக்வா சூறாவளி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட எதிர்பாராத காலநிலை காரணமாக காரைதீவு பொலிஸ் நிலைய பெயர்ப் பலகை சேதமடைந்தது.
குறித்த பெயர்பலகை அகற்றப்பட்டு பல மாதகாலமாகும் நிலையில் அவை மீண்டும் பொருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இதனால் பொதுமக்கள் இன்று வரை பொலிஸ் நற்சான்றிதழ், முறைப்பாடு, போக்குவரத்து உள்ளிட்ட சிவில் விடயங்களுக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்தை அடையாளம் காண முடியாமல் சிரமப்படுகின்றனர்..
காரணம் இன்று வரை காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கான விளம்பர பலகை இன்மை
இந்த விடயத்தில் காரைதீவு பிராந்திய நிறுவனங்கள் உரிய கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










