ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் தீர்ப்புகளையும் ஜூன் மாதம் 09ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்குகள் இன்று (26) திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்புகளும் இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்படவிருந்தன. எனினும், இவ்வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்குகளின் தீர்ப்புகள் இன்னும் தயாராகவில்லை என நீதிபதி அறிவித்துள்ளார்.
இதற்கமைய, தீர்ப்புகளைப் பிரகடனப்படுத்துவதை ஜூன் மாதம் 09 ஆம் திகதி மேற்கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










