வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுத்து மாதாந்த புலமைப் பரிசில் திட்டத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் “நடராஜா அறக்கட்டளை” மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது என அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் திட்டப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன் தெரிவித்தார்,
அனைத்துலக மருத்துவ நல அமைப்பும், நடராஜா அறக்கட்டளை அமைப்பும் இணைந்து நடத்திய, க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு மாதாந்த புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு 17 ஆம் திகதி மஸ்கெலியா பி.எம்.டி. கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது தலைமை வகித்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் டி. நாகராஜ், பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான கல்வி இணைப்பாளர் பி. சந்திரசேகரன் உட்பட அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் 75 மாணவர்கள் முதல் மாதத்துக்குரிய நிதியைப் பெற்றுக் கொண்டார்கள்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் பிறந்து வளர்ந்து சாதாரண குமாஸ்தாவாக இருந்து, தலைமை குமாஸ்தாவாக உயர்ந்து இயற்கை எய்திய நடராஜா அவர்களின் புதல்வரான சிவகுமார் அமெரிக்காவில் உள்ள நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையதில் பணிபுரியக் கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளார். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உயர்கல்வி கற்று இன்று நல்ல நிலைக்கு உயர்ந்துள்ள சிவகுமார் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருக்கின்றார்.
எமது அமைப்பின் ஸ்தாபகர் ராஜம் தேவேந்திரன் அம்மையாரின் வழிகாட்டலில் சிவகுமார் தமது தந்தையார் நடராஜாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வருவதை நன்றியுடன் நினைவுகூர்வதோடு நின்று விடாமல் புலமைப் பரிசில் பெறும் ஒவ்வொரு மாணவரும் கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து சிறந்த பெறுபேறுகளோடு உயர்ந்த நிலைக்கு வருவதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும்.
மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்கு கற்பதில் ஆசை, சாதிப்பதில் ஆர்வம், சவால்களை சமாளிக்கும் ஆளுமை ஆகிய மூன்றையும் மனதில் வளர்த்துக் கொண்டு, தமது பெற்றோரின் வறுமையை எண்ணிப் பார்த்து, அவர்களின் கனவை நனவாக்கி மலையகத்துக்கு பெருமை சேர்க்க முன்வர வேண்டும்.
பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இலகுவாக சித்தியடையக் கூடிய பாடநெறிகளைத் தெரிவு செய்யாமல், கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப, விவசாயத் துறை சார்ந்த பாடநெறிகளைத் தெரிவு செய்வதன் ஊடாக சிறந்த தொழில்வாய்ப்பைப் பெற்று சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் புலமைப் பரிசில் பல்கலைக்கழக அனுமதி பெறும் போதும் வழங்கப்படும். எனவே, உண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற நல்ல பண்புகளோடு அதிபர்களின் சிபாரிசுடன், தேவையான விபரங்களை உரிய நேரத்தில் தரும் போது, தடையின்றி தொடர்ச்சியாக புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.










