முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழ போரின் வலி சுமந்த நாட்களின் நினைவு நிகழ்வும் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் பிரதான பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் காலை 10.30 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அதே போன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் இன்று உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.













