“எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க அரசு செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான மாற்று வழியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதைய அரசு சிங்களப் புத்தாண்டுச் சுபநேரங்கள் மற்றும் வெசாக் கொண்டாட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று சாடிய அவர், நாட்டின் இராணுவத்தினரை நினைவுகூரும் விடயத்தில் அரசு காட்டும் ஆர்வமின்மை கவலையளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.
“நாம் நாட்டை ஒப்படைத்தபோது 224 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி, இன்று 329 ரூபா வரை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுகின்றார்கள். முதலீடுகள் வந்திருந்தால் டொலரின் மதிப்பு ஏன் குறையவில்லை?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசின் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தச் சூழ்ச்சிகள் நடக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், அனைத்துத் தலைவர்களுடனும் பேசி, உண்மைகளை ஆராயும் ஒரு பொதுவான எதிர்க்கட்சி அமைப்பை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்தார். அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்,
“மக்களின் பணத்தில் இதுவரை 2.5 பில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டுள்ளது. அரசின் பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ஜனநாயகத்தை நசுக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” – என்றும் பிரேம்நாத் சி தொலவத்த வலியுறுத்தினார்.










