முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் கட்டப்பட்டிருந்த நினைவுப் பதாகையைப் பொலிஸார் பலவந்தமாக அகற்றியுள்ளதோடு, அது குறித்துக் கேட்கச் சென்ற இளைஞரையும் அச்சுறுத்தியுள்ளனர்.
சுப்பர்மடம் பகுதியில் எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக, பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய, “மே 18 இனத்தின் வலி! மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!!” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை ஒன்றினை மக்கள் கட்டியிருந்தனர்.
இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் சிவில் உடையில் அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார், திடீரென அந்தப் பதாகையை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
பதாகை அகற்றப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பச் சென்ற அப்பகுதி இளைஞரை, “உனக்கு எதிராக வழக்குத் தொடருவோம்” என்று பொலிஸார் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன், அந்த இளைஞரின் பெயர் மற்றும் விவரங்களைப் பொலிஸார் பலவந்தமாகப் பெற்றுக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை வலயத்தில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் தொடர்ச்சியாகக் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நினைவேந்தல் வாரத்தில் பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.










