35 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட பொலன்னறுவை மாவட்ட வருமான வரி அலுவலக துப்புரவு பணியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிரிவீர ஆறுகட்டு பட்டபெந்திகே சுமித் இந்திக குமார எனும் அலுவலக துப்புரவு பணியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டாளரின் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியை முறைப்பாட்டாளரின் பெயருக்கு மாற்றி காணி உரிமப்பத்திரம் தயாரிப்பதற்காக, குறித்த காணியின் பெறுமதியை மதிப்பிட்டு அப்பத்திரத்தில் குறைவாகக் காண்பிக்க சந்தேகநபர் உதவியுள்ளார். இதன் மூலம் செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரி கட்டணத்தைக் குறைத்து, மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக 50 ஆயிரம் ரூபா பணத்தை இவர் இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
பின்னர் குறித்த தொகையை 35 ஆயிரம் ரூபாவாகக் குறைத்துக்கொண்ட சந்தேகநபர், அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.










