தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துத் தெரிவித்தமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பான இராஜதந்திர நடைமுறைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “ஒரு நாட்டின் தலைவர், பொதுவாக மற்றொரு நாட்டின் தலைவருக்கே வாழ்த்துச் செய்திகளை அனுப்புவது வழக்கம். வெளிநாடொன்றின் மாநில முதலமைச்சருக்கு, ஜனாதிபதி ஒருவர் தனிப்பட்ட ரீதியில் வாழ்த்துத் தெரிவிப்பது வியப்பளிக்கின்றது.
மேற்கு வங்க முதலமைச்சராகப் பதவியேற்ற சுவேந்து அதிகாரி மற்றும் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்ற அண்மையில் பதவியேற்ற இந்திய மாநிலத் தலைவர்களுக்கு ஜனாதிபதி ஏன் இத்தகைய வாழ்த்துச் செய்திகளை அனுப்பவில்லை?” – என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக, தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இந்தியா – இலங்கை இடையிலான விரிவான பங்காளித்துவத்துக்குள் தமிழகத்துடன் வலுவான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.










