ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் இல்லாத, தூய்மையான அரசியலில் ஈடுபடும் நபர்களைக் கொண்ட ஒரே கட்சி என்று அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
கடந்த கால ஊழல் மோசடிகளை நிரூபிக்கும் பலம் தற்போதைய அரசிடம் இல்லை என்று சுட்டிக்காட்டிய மரிக்கார் எம்.பி., நிலக்கரி மோசடி குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள 6 மாத கால அவகாச ஆணைக்குழுவின் தீர்ப்பு, 3 மாதங்களில் வெளிவரும் என ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா கூறுவது அந்த ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
“மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படாத ஒரு கட்சிச் செயலாளருக்கு, நீதித்துறை மற்றும் சுயாதீன நிறுவனங்களின் பணிகளில் தலையிட்டு இவ்வாறான அறிக்கைகளை வெளியிட எந்த உரிமையும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். அரசு திறந்த பொருளாதாரத்துக்குப் பதிலாக ‘தீவு மனப்பாங்குடன்’ மூடிய பொருளாதார முறையைப் பின்பற்றுவதால் வெளிநாட்டு முதலீடுகள் வருவதில்லை என்றும் அவர் சாடினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார் என்று குறிப்பிட்ட மரிக்கார், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைக்க அவர் தயாராக இருக்கின்றார் என்றும் தெரிவித்தார். அதேபோல், நகர அபிவிருத்தி அல்லது மின்சக்தித் துறையை பலப்படுத்தத் தானும் தயாராக இருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே என்பதை நினைவூட்டிய அவர், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன என்றும், ஏனைய பொது எதிர்க்கட்சிகளுடன் இணையவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
“தேர்தல்களில் தோல்வியடைந்த போதிலும், மக்கள் எமது கட்சியின் உறுப்பினர்களை ‘திருடர்கள்’ என்று அழைக்கவில்லை என்பது எமக்குக் கிடைத்த பெருமையாகும். எனவே, யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நாட்டின் எதிர்காலத்தை அனுபவம் வாய்ந்த எமது குழுவிடம் ஒப்படைக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.










