மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மே 09 ஆம் திகதி இன்று, காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயல் அமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது அதிக முக்கியத்துவம் பெறும் காணி தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நிர்வாக செயல்முறைகள் குறித்து சிவில் சமூகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் மெசிடோ நிறுவனத்தினால் நிறுவன தலைவர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், காணி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், காணி உரிமை பெற விண்ணப்பித்தவர்கள், பலவந்தமாக காணிகளை இழந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இச்செயல் அமர்வில் பங்குபற்றி பயன்பெற்றனர்.
மேலும், பல்வேறு திணைக்களங்களினால் காணிகளை இழந்ததாகக் கூறப்படும் நபர்கள், நீண்டகாலமாக காணி உரிமை தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்கள், இடம் பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணி உரிமை உறுதிப்படுத்தப்படாத நிலையில் வாழ்ந்து வரும் பொது மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் சிக்கல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
காணி தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் அரச நிர்வாக செயல்முறைகள் குறித்த அறிவை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு வழங்குவதுடன், காணி பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவதற்கான விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும்.
அதேவேளை, காணி உரிமை தொடர்பான புதிய சட்டங்கள், சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தெளிவூட்டல்களும் இந்த செயலமர்வின் மூலம் வழங்கப்பட்டன.
குத்தகை முறையில் காணி பெற்றுக்கொள்வது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் நிர்வாக செயல்முறைகள் மேலும், காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக பொது மக்களுக்கும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் விரிவான விளக்கங்களும் நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
இவ்வாறான அறிவூட்டல் செயற்பாடுகள், காணி தொடர்பான பிரச்சினைகளை சட்டரீதியாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் அணுகுவதற்கும், மக்களுக்கு தகுந்த சேவைகளை இலகுவாக பெற்றுத் தருவதற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச் செயலமர் விற்கான வளவாளராக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக காணி நிர்வாகத் துறையில் பணியாற்றிய முன்னாள் ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் அவர்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.











